போலி இன்சூரன்ஸ் ஆவணங்கள் மூலம் ஒப்பந்த வாகனங்கள் இயக்கம்: கூடங்குளம் அணுமின் நிலைய அலுவலர்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போலி இன்சூரன்ஸ் ஆவணங்கள் மூலம் வாகனங்களை இயக்கியதாக அணுமின்நிலைய அலுவலர்கள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வள்ளியூர்,
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போலி இன்சூரன்ஸ் ஆவணங்கள் மூலம் வாகனங்களை இயக்கியதாக அணுமின்நிலைய அலுவலர்கள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலி இன்சூரன்ஸ்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் லிங்கம். இவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்ததாரர் சங்க தலைவராக இருந்து வருகிறார். இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், ‘கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த வாகன போக்குவரத்தில், சில வாகனங்களை போலி இன்சூரன்ஸ் ஆவணங்கள் மூலம் சிலர் இயக்கி வருகிறார்கள். சில வாகனங்களின் பதிவு எண்களையும் திருத்தி, புதிய வாகனங்கள் போல் இயக்கி வருகிறார்கள். இந்த வாகனங்களில் பயணித்து வரும் வெளிநாட்டு விஞ்ஞானிகள், அதிகாரிகள், பணியாளர்கள் என 1,400 பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மோசடிக்கு அணுமின் நிலைய அலுவலர்கள் அரசு என்ற திருநாவுக்கரசு, பார்த்திபன், சுதர்சன் ஆகியோர் உடந்தையாக இருக்கின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என தெரிவித்து இருந்தார்.
இதேபோன்று வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டிலும் அவர் புகார் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், ‘இதுதொடர்பாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்‘ என உத்தரவிட்டார்.
4 பேர் மீது வழக்கு
இதைத்தொடர்ந்து கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், ஒப்பந்ததாரரான குமரி மாவட்டம் ஒத்ரவிளையை சேர்ந்த அனந்த பத்மநாபன் மகன் ராஜகோபால் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலைய அலுவலர்களான செட்டிகுளத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, பார்த்திபன், சுதர்சன் ஆகிய 4 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது கூடங்குளம் அணுமின் நிலைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story