காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு பூட்டு போட முயற்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்ற தமிழர் விடுதலை களம் கட்சியை சேர்ந்த 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்ற தமிழர் விடுதலை களம் கட்சியை சேர்ந்த 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழர் விடுதலை களம் சார்பில் நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை இழுத்து பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் மாரிமுத்து தலைமையில் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பகல் 11.30 மணி அளவில் தமிழர் விடுதலை களம் நிறுவன தலைவர் ராஜ்குமார் தலைமையில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் போட்டவாறே பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு வந்து பூட்டு போட முயன்றனர்.
70 பேர் கைது
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ராஜ்குமார், மாவட்ட செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் மணிப்பாண்டியன், லெனின், சுரேஷ் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ரெயில் மறியலுக்கு முயற்சி
பா.ம.க. நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சியோன் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் அன்பழகன், துணை தலைவர் பிச்சையா, முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் நிஸ்தார் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து பா.ம.க.வினர் ரெயிலை மறிக்க சந்திப்பு ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கட்சி நிர்வாகிகள் எட்வின், செல்வின் சுரேஷ், மணியாதவ் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து, நெல்லையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story