காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ரெயில் மறியல் 145 பேர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ரெயில் மறியல் 145 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2018 4:30 AM IST (Updated: 12 April 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கரூரில் பா.ம.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 145 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணராயபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று போராட்டம் நடந்தது.

கரூரில் பா.ம.க. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் கையில் கட்சி மற்றும் கருப்பு கொடியுடன் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். ரெயில் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் கோவை- நாகர்கோவில் பயணிகள் ரெயில் பகல் 12.20 மணி அளவில் முதலாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது பா.ம.க.வினர் ரெயில் நிலையத்திற்குள் புகுந்து கோஷமிட்டனர். மேலும் தண்டவாளத்தில் கையில் கொடியுடன் இறங்கி ஓடினர். இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். ரெயில் முன்பு பா.ம.க.வினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று கோஷமிட்டனர். இதைதொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸ் வேன் மற்றும் அரசு பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதில் 30 பெண்கள் உள்பட 145 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மறியல் போராட்டத்திற்கு பின் பகல் 12.35 மணி அளவில் அந்த ரெயில் புறப்பட்டு சென்றது. வழக்கமாக பகல் 11.20 மணிக்கு வர வேண்டிய கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயில் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது.பா.ம.க.சார்பில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் கரூரில் ரெயில் மறியல் போராட்டம் மட்டும் நடைபெற்றது. கடைகள் வழக்கம் போல திறந்திருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள் வழக்கம் போல ஓடின. முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

கிருஷ்ணராயபுரத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்துகடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட ஒரு சில கடைகள் மட்டும் திறந் திருந்தன. 

Next Story