“ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும்” கிராம மக்கள் ஆவேசம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் ஆவேசமாக கூறினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் ஆவேசமாக கூறினர்.
போராட்டம் தொடரும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்களின் போராட்டம் வலுவடைந்து உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்படாத நிலையில், நேற்று 59-வது நாளாக அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அந்த பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள், “எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கவும், நோயின்றி வாழவும், இந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்“ என்று ஆவேசமாக கூறினார்கள்.
இதேபோன்று பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், மாதவன் நகர் ஆகிய கிராமங்களிலும், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், பாளையாபுரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் சில்வர்புரத்திலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது மைல், தபால் தந்தி காலனி, முருகேசன்நகர், சிலோன்காலனி ஆகிய பகுதி மக்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் தர்ணா
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வந்தனர். அதன்படி தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு சாண்டி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை தர்ணா போராட்டம் நடத்தினர்.
அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
முற்றுகை
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பிரபு, வக்கீல் அதிசயகுமார் உள்ளிட்டவர்கள் நேற்று காலையில் வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அந்த நிறுவன மேலாளரிடம், ஸ்டெர்லைட் ஆலைக்கான தாமிர தாதுவை லாரிகளில் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். அதன்பிறகு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுத்து உள்ள நிலையில், தாமிர தாது இறக்குமதி செய்ய அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி மனு கொடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story