ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது


ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது
x
தினத்தந்தி 12 April 2018 4:30 AM IST (Updated: 12 April 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது என்று, கும்பகோணத்தில் திருமாவளவன் கூறினார்.

கும்பகோணம்,

அரியலூர் மாவட்டத்தில் இருந்து தஞ்சை, கும்பகோணம் வழியாக காவிரி உரிமை மீட்பு பயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ராசா ஆகியோர் தொடங்கினர். இந்த குழுவினர் நேற்று முன்தினம் கும்பகோணத்துக்கு வந்தனர். நேற்று காலை கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில் தி.மு.க தலைமையில் அனைத்து கட்சியினரும் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகத்தை செய்துவருகிறது. மே 3-ந் தேதியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பு இல்லை என்பது கடந்த 9-ந் தேதி தீர்ப்பிலிருந்து தெரிய வருகிறது. இது மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்துக்கு செய்யும் பச்சை துரோகமாகும். இன்று(வியாழக்கிழமை)

பிரதமர் நரேந்திரமோடி சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்குகிறார். அவருக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்

தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும். மேலும் விமான நிலையத்தில், காவிரி உரிமைக்காக போராடுபவர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். நாளை(இன்று) காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை மேற்கொள்ளும் நாங்கள் கருப்பு சட்டை அணிந்து நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளோம்.

சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் தடியடி நடத்தி பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. ஐ.பி.எல். போட்டி நடத்துபவர்கள் தமிழர்களின் போராட்ட உணர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க அரசு பச்சை கொடி காட்டுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது ஜெயலிலதா இல்லை என்பதை நினைத்துபார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வரலாற்று கலங்கமாக அமைந்துள்ளது என்பதை அ.தி.மு.க.வை வழிநடத்துபவர்கள் உணராமல் உள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் பா.ஜனதாவால் காலூன்ற முடியாது. தமிழகத்துக்கு காவிரி நீரை போராடி கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story