முழு அடைப்பையொட்டி பா.ம.க.வினர் போராட்டம்: கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் சாலை மறியல்


முழு அடைப்பையொட்டி பா.ம.க.வினர் போராட்டம்: கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 April 2018 4:00 AM IST (Updated: 12 April 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 475 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கக்கோரியும் முழு அடைப்பு போராட்டத்தை பா.ம.க. அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தையொட்டி கடலூர் எஸ்.என்.சாவடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் முன்னிலையில் வன்னியர் சங்க துணை தலைவர் தனம், மாநில இளைஞரணி துணை தலைவர் விஜயவர்மன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்.ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் ராஜ்குமார், கடலூர் தொகுதி செயலாளர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஊர்வலமாக புறப்பட்டு கடலூர்- சிதம்பரம் சாலைக்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாகவும், மோட்டார் சைக்கிளில் பேரணியாகவும் வந்த பா.ம.க.வினர் கடலூர் அண்ணாபாலம் அருகில் உள்ள சிக்னல் அருகே அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு முயற்சி எடுக்காத மாநில அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இது பற்றி அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ் பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 300 பேரை கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நெய்வேலி ஆர்ச் கேட் எதிரே சென்னை- கும்பகோணம் சாலையில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பொறியாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், தங்கவேல், மணிவாசகம், செல்வக்குமார், செல்வா, மாநில விவசாய அணி துணைதலைவர் தலித்சக்திவேல், பாட்டாளி தொழிற்சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் திலகர், பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கயல்ராஜா, நெய்வேலி தொகுதி செயலாளர் சேகர், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சுசிலாசிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள், திடீரென சென்னை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த டவுன்ஷிப் போலீசார் மறியலில் ஈடுபட்ட 105 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

பண்ருட்டி 4 முனை சந்திப்பில் பா.ம.க.வினர் தொகுதி அமைப்பு செயலாளர் நந்தல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், பிரேம்குமார், முத்துக்குமரன், பன்னீர்செல்வம், குமரகுரு, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 15 நிமிடம் ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பா.ம.க.வினர் 4 முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதில் முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட துணை தலைவர் மாணிக்கம், நகர அமைப்பு செயலாளர் செந்தில், நகர தலைவர் ரவி உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 475 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story