மெக்கானிக் கொலை வழக்கு: வாலிபர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை


மெக்கானிக் கொலை வழக்கு: வாலிபர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 12 April 2018 4:00 AM IST (Updated: 12 April 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

மெக்கானிக் கொலை வழக்கில் வாலிபர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மதுரை,

மதுரை செக்கானூரணியை அடுத்த பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 27). இவர் செக்கானூரணியில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். இவரது நண்பர்கள் திருமங்கலம் சந்தைபேட்டையை சேர்ந்த ராஜ்குமார் (26), வலங்காங்குளத்தை சேர்ந்த கோட்டைச்சாமி (26).

சுகுமாரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்துள்ளது. இதை அவரது நண்பர்கள் பார்த்து பொறாமைப்பட்டுள்ளனர். இதனால் அவரை கொலை செய்து உடமைகளை அபகரிக்க ராஜ்குமாரும், கோட்டைச்சாமியும் திட்டமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து சுகுமாரும், அவரது நண்பர்களும் கடந்த 17.12.2013 அன்று செக்கானூரணியில் இருந்து விக்கிரமங்கலம் செல்லும் சாலை அருகில் அமர்ந்து மது அருந்தினார்கள்.

அப்போது திடீரென சுகுமாரை ராஜ்குமாரும், கோட்டைச்சாமியும் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, பணம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்கள்.

இந்த சம்பவம் குறித்து செக்கானூரணி போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமார், கோட்டைச்சாமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் என்.செல்வம் ஆஜரானார்.

முடிவில் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சஞ்சய்பாபா நேற்று தீர்ப்பளித்தார்.

Next Story