காலி பணியிடங்களை நிரப்பக்கோரி பொது சுகாதார துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


காலி பணியிடங்களை நிரப்பக்கோரி பொது சுகாதார துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 April 2018 4:30 AM IST (Updated: 12 April 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி திருச்சியில் பொது சுகாதார துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி மண்டல சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகம் முன் நேற்று பொது சுகாதார துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

பொது சுகாதார துறையில் காலியாக உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒவ்வொரு கிளை சுகாதார நிலையத்திற்கும் ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற அடிப்படையில் 12 ஆயிரம் சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படவேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துவதுடன் 7-11-2008 முதல் முன் தேதியிட்டு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பதவி உயர்வு மற்றும் தொடர் பலன்களை வழங்க வேண்டும். இடம் மாறுதலுக்கான பொது கலந்தாய்வை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில துணை தலைவர் மோகன் பேசினார். அப்போது அவர், ‘கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வருகிற 19-ந்தேதி சென்னையில் உள்ள பொது சுகாதார துறை இயக்குனர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும்’ என்றார்.

இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் லட்சுமணன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எலிசபெத் ராணி, கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் இன்பராஜ், சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார். 

Next Story