புதுச்சேரியில் பா.ம.க.வினர் ரெயில் மறியல்: 220 பேர் கைது


புதுச்சேரியில் பா.ம.க.வினர் ரெயில் மறியல்: 220 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2018 4:45 AM IST (Updated: 12 April 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

முழுஅடைப்பு போராட்டத்தின்போது ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 220 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க.வினர் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை இந்திராகாந்தி சிலை அருகே அவர்கள் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமையில் திரண்டனர். அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். புதிய பஸ் நிலையம் அருகே வந்தபோது தமிழக அரசு பஸ்கள் ஓடிக்கொண்டிருந்ததை பார்த்ததும் பஸ் நிலைய வாசலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதன்பின் அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று திறந்து வைக்கப்பட்டு இருந்த சில கடைகளை அடைக்குமாறு வலியுறுத்தினார்கள். இதனால் திறந்து வைக்கப்பட்டு இருந்த ஒன்று, இரண்டு கடைகளும் அடைக்கப்பட்டன.

ஊர்வலமாக வந்தவர்கள் நேராக ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கு திருப்பதி செல்ல இருந்த ரெயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பா.ம.க. அமைப்பாளர் தன்ராஜ், துணைத்தலைவர் சத்தியாரெட்டியார், நிர்வாகிகள் வடிவேல், ஜெயபாலன் உள்பட சுமார் 220 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story