சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட இருந்த தொழில்அதிபர், மணல் கொள்ளை வழக்கில் கைது


சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட இருந்த தொழில்அதிபர், மணல் கொள்ளை வழக்கில் கைது
x
தினத்தந்தி 12 April 2018 3:10 AM IST (Updated: 12 April 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட இருந்த தொழில் அதிபர், மணல் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு, 

சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட இருந்த தொழில் அதிபர், மணல் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை விஜயாப்புரா கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.

தொழில்அதிபர் கைது

விஜயாப்புரா மாவட்டம் இன்டி தாலுகா பீமாதீராவை சேர்ந்தவர் மகாதேவ், தொழில்அதிபர். இவர், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக இன்டி தொகுதியில் மகாதேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பீமாதீராவில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி மகாதேவ் மீது இன்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். இதனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மகாதேவை நேற்று முன்தினம் இரவு மராட்டிய மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவரை நேற்று காலையில் விஜயாப்புராவுக்கு போலீசார் அழைத்து வந்தார்கள். அதன்பிறகு, நேற்று மதியம் விஜயாப்புரா கோர்ட்டில் மகாதேவை ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்தனர்.

போலீஸ் தடியடி

இதுபற்றி அறிந்ததும் மகாதேவின் ஆதரவாளர்கள் கோர்ட்டு வளாகத்தில் திரண்டு இருந்தனர். பின்னர் மகாதேவுக்கு ஆதரவாக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். உடனே அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டு கொண்டனர். ஆனால் மகாதேவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருக்கு எதிராக அவருடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஒருவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார், அவரை பிடித்து அழைத்து சென்றனர்.

இதற்கிடையில், கோர்ட்டு வளாகத்தில் கோஷங்களை எழுப்பியபடி இருந்த மகாதேவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பின்னர் மகாதேவை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, அங்கிருந்து போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் விஜயாப்புரா கோர்ட்டு வளாகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story