பழனியில் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
பழனி முருகன் கோவிலை சார்ந்த லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பழனி,
பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக விளங்குவது லட்சுமி நாராயண பெருமாள் கோவில். இந்த கோவில் பழனி நகரில் மேற்கு ரத வீதியில் அமைந்துள்ளது. மிகப் பழமையான இத்திருக்கோவிலில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இக்கோவிலில் நாராயண பெருமாளின் மடியில் லட்சுமி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதியும், சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதியும் இந்த கோவிலில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, சித்திரை திருவிழா ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 21-ந் தேதி காலை 7.36 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து லட்சுமி நாராயண பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் தினமும் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜையும், காலை, மாலை இருவேளைகளிலும் சிம்ம வாகனம், சேஷ வாகனம், மரச்சப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
விழாவில் 27-ந் தேதி மாலை 6.35 மணிக்கு மேல் இரவு 7.20 மணிக்குள் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 29-ந் தேதி காலை 5.30 மணிக்கு மேல் தேரேற்றமும், 7.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி தினசரி மாலை 6 மணி முதல் பாசுரங்கள் சேவித்தல், பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டிய, நாடகங்கள், பரத நாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், முதுநிலை கணக்கு அதிகாரி மாணிக்கவேல் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story