கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை


கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
x
தினத்தந்தி 12 April 2018 4:22 AM IST (Updated: 12 April 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

கோடையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை, 

சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை காலத்தில் சென்னை உள்பட நகர்ப்புறப் பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்வது குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வருமாறு:-

* புழல், சோழவரம், பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் 4.24 டி.எம்.சி.(நேற்றைய நிலவரப்படி) குடிநீர் உள்ளது. மேலும் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 8 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* சென்னை நகருக்கு நாள் ஒன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மாநகருக்கு வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு முயற்சிகள் மூலம் சென்னை மாநகர பகுதிகளுக்கு தொடர்ந்து 600 மில்லியன் லிட்டருக்கு குறையாமல் 2018-ம் ஆண்டு டிசம்பர் வரை குடிநீர் வழங்கப்படும்.

போரூர், இரட்டை ஏரி தண்ணீர்

* கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் காரனோடை பகுதியில் 10 ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் எடுக்கப்படும்.

* நெய்வேலி கிணற்று தளத்தில் வடக்குத்து, கெடிலம் மற்றும் பரவணாற்று பகுதிகளில் 5 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.

* கடந்த ஆண்டைப் போலவே, சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும்.

* ஏரியோர நீர் நிலைகளுக்கு அருகில் பெரிய குழாய்களை இறக்கி, அதிக சக்தி வாய்ந்த மின் மோட்டார்களை பொருத்தி தண்ணீர் எடுக்கப்படும்.

* போரூர் ஏரியின் நீராதாரத்தை உபயோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இரட்டை ஏரி நீராதாரத்தை குடிநீராக சுத்திகரித்து உபயோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story