காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினர் 114 பேர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினர் 114 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2018 4:23 AM IST (Updated: 12 April 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினர் 114 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங் களை நடத்துகின்றனர். இந்த நிலையில் நேற்று பா.ம.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

அதன்படி திண்டுக்கல்லில் பா.ம.க.வினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 3 துணை சூப்பிரண்டுகள் 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் காலையிலேயே குவிக்கப்பட்டனர். ரெயில் நிலைய நடைமேடைகள், நுழைவுவாயில், சுரங்கப்பாதை என அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மாநில துணை பொதுச்செயலாளர் பரசுராமன் தலைமையில், துணைத்தலைவர் கோபால், அமைப்பு துணை செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், அமைப்பு செயலாளர் திருப்பதி, நிர்வாகிகள், தொண்டர் கள் நாகல்நகர் மேம்பாலம் அருகே குவிந்தனர். இதனால் ரெயில் நிலையத்துக்குள் பா.ம.க.வினர் நுழையாத வகையில் போலீசார் தடுப்புகள் அமைத்தும், நுழைவு பகுதியில் கயிறு கட்டியும் தடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் நெல்லை- ஈரோடு-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் காலை 11 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது. உடனே பா.ம.க.வினர் ரெயில்நிலையத்தை நோக்கி ஓடி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது 20-க்கும் மேற்பட்டோர் போலீசாரையும் மீறி, ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து 2-வது நடைமேடையில் கோஷம் எழுப்பியபடி ஓடினர். அவர்களை தடுப்பதற்காக போலீசார் பின்னால் ஓடினர். இதனால் ரெயில் நிலையமே பரபரப்பானது.

ஒருவழியாக ரெயிலை மறிப்பதற்கு முன்பாக, நடைமேடையில் இருந்த போலீசார் பா.ம.க. கட்சியினரை தடுத்து நிறுத்தினர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற 68 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்ட னர். மேலும் 68 பேர் மீதும் திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல் ஒட்டன்சத்திரத்தில் பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் ஜோதிமுத்து தலைமையில், மாநில துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் வைரமுத்து உள்பட அந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ரெயிலை மறிப்பதற்காக, ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 46 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story