தூத்துக்குடியில் கல்வீச்சு–பரபரப்பு: ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் வந்த வாகனங்கள் மீது திடீர் தாக்குதல் 2 பஸ், கார் கண்ணாடி உடைப்பு


தூத்துக்குடியில் கல்வீச்சு–பரபரப்பு: ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் வந்த வாகனங்கள் மீது திடீர் தாக்குதல் 2 பஸ், கார் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 13 April 2018 2:30 AM IST (Updated: 13 April 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் வந்த வாகனங்கள் திடீரென கல்வீசி தாக்கப்பட்டன. இதில் 2 பஸ், கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் வந்த வாகனங்கள் திடீரென கல்வீசி தாக்கப்பட்டன. இதில் 2 பஸ், கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 12 இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் ஆலையை இயக்குவதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்த மனுவும் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று காலை ஸ்டெர்லைட் ஆலை முன்பு திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

கலெக்டரிடம் மனு 

அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலை உதவி தலைவர்கள் தனவேல், திவாகரன் ஆகியோர் தலைமையில் 2 பஸ்களில் 50–க்கும் மேற்பட்ட ஆலை ஊழியர்கள் மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக புறப்பட்டு சென்றனர். அவர்கள் கலெக்டர் வெங்கடேசை சந்தித்து ஊழியர்களின் கையெழுத்துடன் கூடிய கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையால் சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றன. ஆலை மூடப்பட்டு இருப்பதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் ஆலையை இயக்க உரிய அனுமதி அளிக்க வேண்டும். ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

பஸ் மீது கல்வீச்சு 

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்த தகவல் அறிந்தவுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த பாத்திமாபாபு, கிருஷ்ணமூர்த்தி, பிரபு, ராஜா, தமிழ்செல்வன், மகேஷ் உள்ளிட்டோர் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஏராளமானவர்கள் மடத்தூர் விலக்கு பகுதியில் திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திய ஊழியர்கள், மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கள் குடியிருப்புகளுக்கு புறப்பட்டனர். அவர்கள் 3 பஸ் மற்றும் ஒரு வேனில் புறப்பட்டு வந்தனர். முதலில் ஒரு பஸ்சும், வேனும் மடத்தூர் விலக்கு பகுதியில் வந்தது. அங்கு திரண்டு இருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அந்த பஸ்சை வழிமறித்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென பஸ் கல்வீசி தாக்கப்பட்டது.

3 பேர் காயம் 

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. பஸ்சின் முன்பகுதியில் இருந்த ஒரு சிறுமி, டிரைவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த பஸ்சுக்கு பின்னால் வந்த வேனில் இருந்து சாவியை போராட்டக்காரர்கள் பறித்தனர். இதனால் அந்த வேனில் இருந்த பெண்கள், குழந்தைகள் மிகுந்த பதற்றம் அடைந்தனர். தகவல் அறிந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன், சப்–இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீசார், கண்ணாடி உடைக்கப்பட்ட பஸ்சை அங்கிருந்து சிறிது தூரத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினர். வேன் சாவியை போராட்டக்காரர்கள் பிடுங்கி சென்றதால், வேனில் இருந்தவர்கள் ஆலை ஊழியர்களின் உதவியுடன் வேனில் இருந்து இறங்கி கண்ணாடி உடைக்கப்பட்ட பஸ்சில் செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது போராட்டக்காரர்கள் அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் ஆலையை மூடக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பியபடி இருந்தனர்.

பேச்சுவார்த்தை 

அந்த வழியாக ஸ்டெர்லைட் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு மேலும் 2 பஸ்கள் வந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த ஆலை எதிர்ப்பாளர்கள் அந்த பஸ்களையும் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு பஸ்சின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. அந்த வழியாக வந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் ஒருவரின் கார் கண்ணாடிகளையும் உடைத்ததாக தெரிகிறது.

அதன்பிறகு போலீசார், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி–மதுரை பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக நேற்று அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story