மாணவ- மாணவிகள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் பேச்சு


மாணவ- மாணவிகள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் பேச்சு
x
தினத்தந்தி 13 April 2018 4:00 AM IST (Updated: 13 April 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

மாணவ- மாணவிகள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் செந்தமிழ்செல்வி கூறினார்.

குளித்தலை,

குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இக்கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அன்பரசு தலைமை தாங்கி ஆண்டறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் செந்தமிழ்செல்வி பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கல்லூரி மாணவ- மாணவிகள் முன்னேற்றம் அடைந்திட நல்ல உடல்நலம் அவசியம். நல்ல உடல்நலம் பெற பயிற்சியும், ஆரோக்கியமான உணவும் அவசியமாகும். வாழ்வில் வெற்றி பெற நம்மை சுற்றியுள்ள பொது அறிவும் அவசியமாகும். சரியான இலக்குடன் உழைப்பதுடன் அறிவுசார் திறமைகளையும், மாணவ- மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய மாணவ- மாணவிகளுக்கு வாழ்வில் வெற்றி பெற நிதானம், கவனம், பொறுமை அவசியமாகும். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். எத்தகைய நெருக்கடி வந்தாலும் முயற்சியை கைவிடாது தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும். உண்மையுடன் உழைக்க வேண்டும். உண்மையுடன் உழைத்தால் வாழ்வில் வெற்றி தானாக தேடிவரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பேராசிரியர் முருகானந்தம் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கையை வாசித்தார். குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமோகன், இக்கல்லூரி முன்னாள் முதல்வர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த விழாவில் இக்கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இயற்பியல் துறைத்தலைவர் ராமநாதன் வரவேற்றார். முடிவில் கணினி அறிவியல் துறைத்தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். 

Next Story