அரசு பஸ்-லாரி மோதல்; 2 பேர் பலி 8 பேர் காயம்


அரசு பஸ்-லாரி மோதல்; 2 பேர் பலி 8 பேர் காயம்
x
தினத்தந்தி 13 April 2018 3:45 AM IST (Updated: 13 April 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி அருகே பழுதாகி நின்று அரசு பஸ் மீது, லாரி மோதியது. அதில் கீழே நின்றிருந்த பயணிகள் 2 பேர் இறந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

வாடிப்பட்டி,

மதுரை ஆரப்பாளையம் பஸ்நிலையத்திலிருந்து ஓசூருக்கு நேற்று அதிகாலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை தர்மபுரியை சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டி வந்தார். பழனி என்பவர் கண்டக்டராக பணியாற்றினார். பஸ்சில் 28 பேர் பயணம் செய்தனர். பஸ் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி என்ற இடத்தில் வந்தபோது பஸ்சின் பின்பக்கம் புகை வருவது போல தெரிந்ததும், டிரைவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தி, அதன் பின்பக்க சிவப்பு விளக்கை ஒளிர செய்து பயணிகளை கீழே இறங்கி மாற்று பஸ்சில் செல்லுமாறு கூறினார்.

இதையடுத்து பயணிகள் அனைவரும் இறங்கி பஸ்சின் ஓரமாக நின்றிருந்தனர். அப்போது தூத்துக்குடியிலிருந்து கரூருக்கு நிலக்கரி ஏற்றிய லாரி வந்தது. அதை ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த டிரைவர் கணேசன் ஓட்டி வந்தார். அப்போது திடீரென லாரி நின்றுகொண்டிருந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் பின்புறம் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் மோதிய வேகத்தில் அருகிலிருந்த பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விழுந்தது.

லாரி மோதிய வேகத்தில், பஸ்சின் முன்புறம் நின்றிருந்த கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த மாரியப்பன் மகன் சண்முகவேல் (வயது 38), கரூர் மாரிமுத்து மகன் கார்த்திக் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் சங்கரேஸ்வரி (31), அன்னலட்சுமி(54), ரங்கசாமி (58), சத்யராஜ் (24), முருகன் (44), ஆனந்தவள்ளி (46), உலகநாதன் (52) உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார்.

Next Story