பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஊர்வலம்


பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஊர்வலம்
x
தினத்தந்தி 13 April 2018 4:30 AM IST (Updated: 13 April 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வேலூரில் தி.மு.க.வினர் கருப்பு சட்டையணிந்து ஊர்வலமாக சென்றனர்.

வேலூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னைஅருகே நடைபெற்ற ராணுவ கண்காட்சியை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திரமோடி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்று வரும்நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டப்போவதாக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன. இந்த நிலையில் ராணுவ கண்காட்சியை தொடங்கிவைக்க பிரதமர் மோடி நேற்று சென்னைக்குவந்தார்.


இதற்கு எதிர்ப்புதெரிவித்து வேலூரில் தி.மு.க.வினர் ஊர்வலம் நடத்தினர். கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு பலூன்களுடன் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம், கோட்டை, பழைய பஸ்நிலையம், காட்பாடி ரோடு வழியாக கிரீன் சர்க்கிள்வரை சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் தி.மு.க. அலுவலகத்தை அடைந்தனர்.

ஊர்வலத்தில் சென்றவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திரமோடியை கண்டித்து கோ‌ஷமிட்டபடி சென்றனர். இதில் அவைத்தலைவர் முகமதுசகி உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மேலும் காட்பாடியில் உள்ள முன்னாள் அமைச்சர் துரைமுருகன்வீடு, ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வீடு, தி.மு.க. அலுவலகம், மற்றும் ஆர்.என்.பாளையம், சலவன்பேட்டை, சைதாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் சில வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.

Next Story