கடலில் கச்சா எண்ணெய் கொட்டியதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வாரங்களுக்குள் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
கப்பல்கள் மோதியதில் கடலில் கச்சா எண்ணெய் கொட்டியதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வாரங்களுக்குள் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், கே.ஆர்.செல்வராஜ்குமார், மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.தியாகராஜன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
சென்னை காமராஜர் துறைமுகத்தில் 2017–ம் ஆண்டு 2 கப்பல்கள் மோதிக்கொண்டதில் ஒரு கப்பல் சேதமடைந்து அதில் இருந்த 196.4 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த எண்ணெய் பழவேற்காடு முதல் மாமல்லபுரம் வரை பரவியதால் மீனவர்களால் 20 நாட்களுக்கு மேல் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் கப்பல் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெற்று, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு மீன்வளத்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அரசு பரிசீலனை
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் கே.மகேஸ்வரன் ஆஜராகி வாதிட்டார்.
மீன்வளத்துறை இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழு கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொரு பிரிவினராக வகைப்படுத்தியுள்ளது. கப்பல் நிறுவனங்களில் இருந்து ஏற்கனவே பெறப்பட்ட தொகையில் ஒவ்வொரு பிரிவினர்களுக்கும் எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும்? என்பதை கணக்கிட்டு குழு வழங்கிய பரிந்துரையை அரசு பரிசீலித்து வருகிறது. 4 வாரங்களுக்குள் மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுவிடும்’ என்று கூறியிருந்தது.
4 வாரங்களுக்குள்
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த அறிக்கையை விரைவாக பரிசீலித்து, இன்றில் இருந்து 4 வாரங்களுக்குள் மீனவர்களுக்கு உரிய இழ6ப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story