தண்டையார்பேட்டையில் குடிநீர் வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்
தண்டையார்பேட்டையில் குடிநீர் வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்,
சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலம் 38–வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வினோபா நகர், நெடுஞ்செழியன்நகர், பட்டேல் நகர், தமிழன் நகர் ஆகிய நகர்களில் 13 தெருக்கள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குழாய்கள் மூலமாகவும், டேங்கர் லாரிகள் மூலமாகவும்
குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களாக குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் அவதி
இதனால் துர்நாற்றம் வீசியதால் அந்த குடிநீரை பயன்
படுத்த முடியவில்லை. லாரிகள் மூலமும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வார்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.
உண்ணாவிரதம்
ஆனால் அதன்பிறகும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் வாரிய அதிகாரிகளை கண்டித்து நேற்று காலை வினோபா நகர் பிரதான சாலையில் சாமியானா பந்தல் அமைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான பெண்கள் உள்பட 300–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்ட கழிவுநீர் கலந்த குடிநீரை பாட்டில்களில் பிடித்து வந்து இருந்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களிடம் குடிநீர் வாரிய அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story