இழப்பீடு வழங்காததால் ராசிபுரம் ரெயில் நிலையம், தாலுகா அலுவலகத்தில் ஜப்தி முயற்சியால் பரபரப்பு


இழப்பீடு வழங்காததால் ராசிபுரம் ரெயில் நிலையம், தாலுகா அலுவலகத்தில் ஜப்தி முயற்சியால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 April 2018 4:15 AM IST (Updated: 13 April 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே துறைக்கு 23 பேரின் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு வழங்காததால் ராசிபுரம் ரெயில் நிலையம், தாலுகா அலுவலகத்தில் ஜப்தி செய்ய ஊழியர் வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம்,

சேலம்-கரூர் அகல ரெயில்பாதை திட்டத்திற்காக ராசிபுரம் தாலுகாவைச் சேர்ந்த நெ.3 குமாரபாளையம், கீரனூர், சேலம் குகை பகுதியைச் சேர்ந்த குணசேகரன், ராஜசேகரன், பொன்னுசாமி, ஜெயகுமார் உள்பட 23 பேரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு அரசு வழங்கிய இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை என்று கூறி, ரூ.11 கோடியே 52 லட்சத்து 2 ஆயிரத்து 258-ஐ இழப்பீடாக ரெயில்வே துறை மற்றும் நில எடுப்பு தாசில்தார் அலுவலகம் வழங்க வேண்டும் என்று கோரி ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 23 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும்படி கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந் தேதி சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இழப்பீடு தொகை வழங்காததால் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தனர். ரெயில்பாதை திட்டத்திற்கு நிலம் எடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை இதுவரை வழங்கவில்லை என்பதால் கடந்த 6-ந் தேதி ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபா சந்திரன், ரெயில்வே துறைக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.15 லட்சம் மதிப்புள்ள டிராலி ஆகியவற்றை ஜப்தி செய்யவும், ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ரூ.14 லட்சம் மதிப்புள்ள 2 ஜீப்கள் உள்பட ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தாசில்தார் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தைச் சேர்ந்த கோர்ட்டு ஊழியர் (அமீனா) மகாதேவன் ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த ரெயில் நிலைய அதிகாரி தருண்குமாரிடம் கார் மற்றும் டிராலி ஆகியவற்றை ஜப்தி செய்ய வந்திருப்பதாக கோர்ட்டு ஊழியர் தெரிவித்தார். இதுபற்றி ரெயில் நிலைய அதிகாரி சேலத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இந்த நிலையில் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் ஜப்தி செய்யப்பட வேண்டிய டிராலி மற்றும் கார் இல்லை என்பதால் கோர்ட்டு ஊழியர் வாகனங்களை ஜப்தி செய்ய இயலாமல் திரும்பினார்.

நாமக்கல்லில் உள்ள நில எடுப்பு தாசில்தார் அலுவலகத்திற்காக ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள வாகனங்களையும், கம்ப்யூட்டர் உள்பட பொருட்களையும் ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர் சென்றார். அங்கு அவர் தாசில்தார் சாகுல் அமீது, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாஸ்கர் ஆகியோரிடம் ஜப்தி செய்ய வந்திருக்கும் தகவலை தெரிவித்தார்.

அப்போது தாசில்தார் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ரெயில்வே துறை இழப்பீடு தொகையை வழங்க தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும், எனவே வாகனங்களை ஜப்தி செய்ய வேண்டாம் என்றும், கால அவகாசம் அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அதன்பேரில் தாலுகா அலுவலக வாகனங்களை ஜப்தி செய்யாமல் கோர்ட்டு ஊழியர் திரும்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசிபுரம் ரெயில் நிலையம், தாலுகா அலுவலகத்தில் ஜப்தி முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story