பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடு, கடைகளில் கருப்பு கொடி ஏற்றி தி.மு.க.வினர் போராட்டம்


பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடு, கடைகளில் கருப்பு கொடி ஏற்றி தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 13 April 2018 4:30 AM IST (Updated: 13 April 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் பல்வேறு இடங்களில் வீடு, கடைகளில் கருப்பு கொடி ஏற்றி தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், பிரதமர் மோடி நேற்று சென்னை அருகே திருவிடந்தையில் மத்திய பாதுகாப்பு துறையின் ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்று தொடங்கி வைத்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

அதன்படி சேலத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வினர் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரனின் வீடு மத்திய சிறை அருகே டி.வி.எஸ்.நகரில் உள்ளது. அவருடைய வீட்டில் நேற்று காலையில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. அதேபோல், புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. இதேபோல், சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வீட்டிலும், பூலாவரியில் உள்ள கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.


அழகாபுரம் பகுதியில் மாநகராட்சி முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் புவனேஸ்வரி முரளி, முன்னாள் மாநகர துணை செயலாளர் முரளி ஆகியோர் தலைமையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அழகாபுரம் அம்பேத்கர் தெருவில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி, பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

காவிரி நீர் கிடைக்காததை வெளிக்காட்டும் வகையில் தி.மு.க.வினர் தங்களது கைகளில் குடம், காலி மண் பானைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

கிச்சிப்பாளையத்தில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மாநகர துணை செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குழந்தைகள், பெண்கள் என பலர் பங்கேற்று கைகளில் கருப்பு கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். மேலும், அப்பகுதியில் 100–க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது. 44–வது வார்டுக்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் கரீம் காம்பவுண்டு பகுதியில் உள்ள 50–க்கும் மேற்பட்ட வீடுகளில் மனிதநேய மக்கள் கட்சியினர் கருப்பு கொடி ஏற்றி பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் சாமிநாதபுரம் பகுதியில் நேற்று மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் ஏராளமானோர் கருப்பு கொடி ஏந்தி தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது, காவிரி நீர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, நீட் தேர்வு, எய்ம்ஸ் மருத்துவமனை, ஒகி புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும், மத்திய அரசை கண்டித்தும், பிரதமருக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல், பெரமனூர், சின்னேரிவயல்காடு, தாதகாப்பட்டி, பள்ளப்பட்டி, புதிய பஸ்நிலையம் உள்பட பல்வேறு இடங்களிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கருப்பு சட்டைகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகரில் பல்வேறு இடங்களில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.


Next Story