பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி


பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 13 April 2018 5:00 AM IST (Updated: 13 April 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்காதது ஏன்? என்று கடலூர் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

கடலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை கடந்த 7-ந்தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து தொடங்கினார்.

அவருடன் காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த பயணத்தில் வந்தனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் இருந்து மற்றொரு குழுவினர் நடைபயணத்தை தொடங்கினர். இந்த 2 குழுவினரும் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு வந்தனர். முன்னதாக வல்லம்படுகை வழியாக வந்த மு.க.ஸ்டாலின் கடவாச்சேரியில் விவசாயிகளை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து சிதம்பரம் வந்த 2 குழுவினரும் ஒன்று சேர்ந்து மாலை 3 மணிக்கு சிதம்பரம் மேலவீதி, கஞ்சித்தொட்டி முனை, புறவழிச்சாலை கீரப்பாளையம், புவனகிரி, புதுச்சத்திரம், ஆலப்பாக்கம் வழியாக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தை வந்தடைந்தனர்.

அதைத்தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் காவிரி உரிமை மீட்பு பயணத்தின் நோக்கத்தை விளக்கிடும் வகையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வரவேற்றார். கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தொடங்கிய காவிரி மீட்பு பயணத்தை கடலூரில் நிறைவு செய்கிறோம். இது தனிப்பட்ட கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது தொடர்பாக அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டி, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். கடந்த 5-ந் தேதி இதுவரையில் தமிழகம் மட்டுமல்ல, இந்திய அளவில் இப்படி ஒரு முழு அடைப்பு போராட்டம் நடந்ததாக வரலாறு இல்லை. இந்த போராட்டத்தில் நாம் 100-க்கு 100 சதவீதம் வெற்றிபெற்றிருக்கிறோம்.

இதன் தொடர்ச்சியாக காவிரி உரிமை மீட்பு பயணத்தை 2 குழுக்களாக தொடங்கினோம். ஒரு குழு திருச்சி முக்கொம்பில் இருந்தும், மற்றொரு குழு அரியலூரில் இருந்தும் பயணத்தை தொடங்கியது. இந்த 2 குழுக்களும் இன்று கடலூருக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இந்த பயணத்தை தொடங்கி வைத்ததும் தி.க. தலைவர் கி.வீரமணிதான், இந்த பயணத்தை முடித்து வைக்கவும் அவரே வந்திருக்கிறார்.

இந்த பயணத்தை நாம் எப்படியெல்லாம் நடத்தி முடித்து இருக்கிறோம் என்று இங்கு பலர் சொன்னார்கள். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக டெல்டா பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் பயண திட்டம் வகுக்கப்பட்டது.

நாங்கள் சென்ற இடமெல்லாம் காவிரி உரிமை மீட்பு பயணத்துக்கு பலதரப்பட்ட மக்களும் நல்ல வரவேற்பு அளித்தனர். அந்த பயணத்தை இன்று கடலூரில் நிறைவு செய்கிறோம். தமிழகத்துக்கு 12-ந் தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்ற தீர்மானத்தையும் அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் நிறைவேற்றினோம்.

அதன்படி மோடி இன்று காலையில் சென்னைக்கு வந்தார். அவர் எப்படி வந்தார் என்பது நமக்கு தெரியும். டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் ராணுவ கண்காட்சி நடைபெற்ற இடத்துக்கு வந்துள்ளார். முற்றிலுமாக அவர் சாலை பயணத்தை தவிர்த்துள்ளார்.

ஆனால் விமானம் மூலம் சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை, தமிழக முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்திற்கு சென்று, அவருக்கு பச்சை சால்வை போர்த்தி வரவேற்றுள்ளார். அதுமட்டுமின்றி பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அவர் அதற்காக மனு கொடுத்திருக்க மாட்டார். அந்த மனுவில், எப்படியாவது எனது பதவியை காப்பாற்றித்தாருங்கள் என்று எழுதி கொடுத்திருப்பார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்கவில்லை என்று கூறி இருக்கிறார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவும் இல்லை, அதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆக இப்படிபட்ட முதல்-அமைச்சர்தான் இன்று ஆட்சி செய்து வருகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக கவர்னரை நாளை(அதாவது இன்று) சந்திக்க இருக்கிறோம். அவர் மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்படுவதால் நாம் தொடர்ந்து கருப்புகொடி காட்டுகிறோம். ஆனாலும் அவர் மத்திய அரசின் பிரதிநிதி என்பதால் அவரை சந்திக்கப்போகிறோம். அவர் எங்களுக்கு நாளை(இன்று) நேரம் ஒதுக்கி தந்து உள்ளார். காலை 11 மணி அளவில் அறிவாலயத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் ஒன்று கூடி, மதியம் 12 மணி அளவில் கவர்னரை சந்திக்க உள்ளோம்.

இந்த பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு கடலூரில் தங்கி விட்டு, நாளை காலையில் கடலூரில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களுடன் பேரணியாக சென்னைக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதில் ஒரு மாற்றம் செய்துள்ளோம். பொதுமக்கள் பலர் நேரடியாக என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். பேரணியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறினார்கள்.

நாம் தொடங்கிய பயணம் அமைதியாக முடிந்திருக்கிறது. ஒரு பிரச்சினையும் ஏற் படவில்லை. எனவே கடலூரில் இருந்து நாளை காலையில் சென்னைக்கு வாகனங்களில் பேரணியாக செல்லலாம் என்று நினைத்து வந்த அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். தயவு செய்து நீங்கள் வாகனங்களில் சென்னைக்கு வர வேண்டாம். அந்த திட்டத்தை மறந்து விடுங்கள்.

வைத்தீஸ்வரன்கோவிலில் போலீஸ் அதிகாரி ஒருவர், என்னிடம் ஒரு சம்மன் கொடுக்க வந்தார். உடனே நான் என்னிடம் எங்கே வந்து சம்மன் கொடுக்கிறீர்கள் என்று கேட்டேன். பின்னர் அந்த சம்மனை வாங்க முடியாது. வேண்டுமானால் என்னை கைது செய்து அழைத்துச்செல்லுங்கள் என்று கூறினேன்.

கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தோழமை கட்சிகள், அமைப்புகள் நம்முடன் ஒருங்கிணைந்து இந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், ஏதோ தேர்தலுக்காக இல்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக ஒருங்கிணைந்திருக்கிறோம். காவிரி உரிமை மீட்பு பயணம் இன்று முடிவடைந்திருக்கலாம், ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை இந்த போராட்டம் தொடரும்.

இந்த காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்குவதற்கு முன்பு கலைஞரை சந்தித்து பேசினேன். அப்போது நான், அனைத்து கட்சி தலைவர்களுடன் பேசி நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து கூறினேன். அவர் இப்போது இருக்கிற உடல் நிலைக்கு, அவரது கையை தூக்குவதற்கே மற்றொருவரின் உதவி தேவைப்படுகிறது. அப்படிபட்ட சூழ்நிலையில் நான் சொன்னதும், உடனே அவர் என் கையை பிடித்துக்கொண்டு ஒரு அழுத்து, அழுத்தினார். என்னை பார்த்து புன்முறுவல் செய்தார்.

பின்னர் நான், அவரது காதின் அருகில் சென்று அப்பா என்னை வாழ்த்தி அனுப்பி வையுங்கள் என்று கூறினேன். உடனே அவர், கையை தூக்கி எனது தலையில் வைத்து வாழ்த்தினார். அவர் என்னை மட்டுமல்ல, அனைவரையும் தான் வாழ்த்தினார். அவரது வாழ்த்துகளோடு காவிரி உரிமையை மீட்போம். காவிரி பிரச்சினையில் வெற்றி பெறுவோம். பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும் வரை போராடுவோம்.. போராடுவோம்... இவ்வாறு அவர் பேசினார்.

இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பெரியசாமி, கனிமொழி எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Next Story