மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்


மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 April 2018 3:38 AM IST (Updated: 13 April 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மே வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தார்.

திண்டுக்கல்,

அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் பாலச்சந்திர போஸ் தலைமையில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்டவர்கள் நெற்றியில் நாமமிட்டு, கைகளில் கருப்பு பலூன்களை வைத்திருந்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், அதற்கு நடவடிக்கை எடுக்காத மாநில அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் அவர்கள் திடீரென்று பஸ் நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டதால், அனைவரையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வேனில் ஏற்றினர். அதன்படி மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். முன்னதாக அவர்கள் பழனி சாலையில் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் ஒரு கடை திறப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்காக கேரள செண்டை மேள கலைஞர்கள் மேளம் அடித்துக்கொண்டு இருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர், கேரள மேளத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை விரட்ட முயன்றனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், செண்டை மேள கலைஞர்களிடம் சிறிது நேரம் அதனை நிறுத்தி வைக்குமாறு கூறினர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த கட்சியினர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story