ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 14 April 2018 2:30 AM IST (Updated: 14 April 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், தடுப்புகளையும் மாணவர்கள் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

13 இடங்களில் போராட்டம் 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி அ.குமரெட்டியபுரத்தில் 61–வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போன்று பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், மாதவன் நகர், கிராமங்களிலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 3–வது மைல், தபால் தந்தி காலனி, முருகேசன்நகர், சிலோன்காலனி ஆகிய இடங்களிலும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், பாளையாபுரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் சில்வர்புரத்தில் போராட்டம் நடத்துகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்திய மாணவர் சங்கம் 

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்காக வ.உ.சி. கல்லூரி முன்பு சுமார் 150 மாணவர்கள் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து பேரணியாக கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேரணியாக செல்ல அனுமதி மறுத்து 2 பஸ்களில் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு மெயின் ரோட்டில் காத்திருந்த தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையம், பி‌ஷப்கால்டுவெல் கல்லூரி மாணவர்களுடன் இந்த மாணவர்களும் இணைந்தனர். அதன்பிறகு மாணவர்கள் அனைவரும் பேரணியாக கலெக்டர் அலுவலகம் உள்ளே சென்றனர். அப்போது மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே சென்றுவிடாமல் இருப்பதற்காக சிறிது தூரத்தில் இரும்பு தடுப்புகளை வைத்து தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள், போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தூக்கி எறிந்து விட்டு முன்னேறினர். இதில் சில போலீசார் லேசான காயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் கலெக்டர் அலுவலக வாசலை சிறிது நேரம் பூட்டி பாதுகாப்பாக நின்றனர்.

முற்றுகை 

உடனே மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அமர்நாத் முன்னிலை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் கண்ணன், மாநில செயலாளர் உச்சிமகாளி, மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், விவசாயிகள் சங்க செயலாளர் பெருமாள், புவிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். மாவட்ட கலெக்டர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாநகர தலைவர் ரமேஷ், அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆசிக், மாணவிகள் ஒருங்கிணைப்பாளர் சுப்புலட்சுமி, பிரியதர்ஷினி உள்பட திரளான மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story