பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பயிற்சி டாக்டர் மர்ம சாவு
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பயிற்சி டாக்டர் மர்மமான முறையில் இறந்ததாக அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பயிற்சி டாக்டர் மர்மமான முறையில் இறந்ததாக அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயிற்சி டாக்டர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பாவந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். கனரா வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் சுந்தரவேல் (வயது 27). இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வந்தார். 2013–ம் ஆண்டு படிப்பை பாதியில் விட்டுச்சென்ற சுந்தரவேல் மீண்டும் தற்போது கல்லூரியில் சேர்ந்து பயிற்சி டாக்டராக படித்து வந்துள்ளார்.
இதற்காக அவர் பாளையங்கோட்டையில் சக மாணவர்கள் தங்கி இருந்த வீட்டில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
மர்ம சாவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுந்தரவேலுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வெளியே மரத்தடியில் சுருண்டு விழுந்து கிடந்தார். இதைக்கண்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவரை மீட்டு மீண்டும் சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த சுந்தரவேலின் பெற்றோர், சகோதரர், சகோதரிகள் நேற்று காலை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் அவசர சிகிச்சை பிரிவு வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘சுந்தரவேல் சாவுக்கான காரணம் தெரியவில்லை. அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டார். அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது குறித்தும், இறந்தது குறித்தும் முறையாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. எனவே, சுந்தரவேல் சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்று குற்றம் சாட்டினர். மேலும் இதுதொடர்பாக ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
காரணம் என்ன?
இதையடுத்து சுந்தரவேல் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்துவ கல்லூரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதுதொடர்பாக ஆஸ்பத்திரி டீன் கண்ணன் கூறுகையில், ‘‘சுந்தரவேல் வயிற்று வலிக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவரது சாவில் சந்தேகம் இருந்தால், அது பிரேத பரிசோதனையில் தெரியவந்து விடும்’’ என்றார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பிரேத பரிசோதனை முடிவில்தான் அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும். அதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Related Tags :
Next Story