மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம், கலெக்டர் வேண்டுகோள்


மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம், கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 April 2018 3:45 AM IST (Updated: 14 April 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது. இந்த காலத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கலெக்டர் தண்டபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்,

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகில் உள்ள பகுதி முழுவதும் (திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்தடை ஆணையின்படி இந்த ஆண்டும் விசை மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மேற்கண்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தடை காலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் தொடங்கி வருகிற ஜூன் 14-ந்தேதி வரை நடக்கிறது. ஆகவே கடலூர் மாவட்ட மீனவர்கள் இந்த மீன்பிடி தடை காலத்தில் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளை தவிர வேறு எந்த வகையான மீன்பிடி படகுகளைக்கொண்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான இந்த 61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்பு உள்ளதால், கடலூர் மாவட்ட மீனவர்கள் இந்த தடை காலத்தில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Next Story