காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வைகோவின் உறவினர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வைகோவின் உறவினர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு
x
தினத்தந்தி 14 April 2018 4:30 AM IST (Updated: 14 April 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, வைகோவின் உறவினர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

விருதுநகர்,

விருதுநகரில் நடுரோட்டில் நேற்று காலை நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விருதுநகர் ஸ்டேட் பேங்க் காலனியில் வசிப்பவர், சரவணசுரேஷ் (வயது 50). இவர் அட்டை வணிகம் செய்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா விருதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

சரவணசுரேஷ், வழக்கமாக விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை நடைபயிற்சிக்காக காரில் செல்வது வழக்கம்.

நேற்றும் காலையில் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்ற அவர் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் தமிழ்நாடு ஓட்டல் அருகே சென்ற போது, காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கினார்.

பின்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து தன் உடல் மீது ஊற்றினார். “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும்“ என்று கோஷமிட்டபடியே உடலில் தீ வைத்துக்கொண்டார்.

இதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஓடிப்போய், சரவணசுரேசின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுபற்றி, அவருடைய உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவருடைய மனைவி அமுதா சம்பவ இடத்துக்கு ஓடி வந்து தீக்காயங்களுடன் இருந்த கணவரை பார்த்து கதறி அழுதார். தொடர்ந்து போலீசார் அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் செல்லும் போதும், “சரவணசுரேஷ் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்“ என்று கூறியபடியே சென்றார்.

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சரவணசுரேசுக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறியதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீக்குளித்த சரவணசுரேஷ், வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் சகோதரர் ராமானுஜத்தின் மகன் ஆவார். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. தொழில் நிமித்தம் விருதுநகரில் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஜெயசூர்யா மதுரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மகள் ஜெயரேணுகா விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். 

Next Story