திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்


திருச்சி  உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்
x
தினத்தந்தி 14 April 2018 4:00 AM IST (Updated: 14 April 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி எம்.ஜி.ஆர். சிலை - அண்ணாநகர் இணைப்பு சாலையில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் ரூ.45 லட்சத்தில் மாநகராட்சி சார்பில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி,

திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து தென்னூர் அண்ணாநகரை இணைக்கும் சாலையில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் கரை மாநகராட்சியின் சார்பில் சீரமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த சாலையின் ஓரத்தில் குறிப்பிட்ட தூரம் வரை பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கு வசதியாக டைல்ஸ்களால் ஆன ‘வாக்கிங் டிராக்’ அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டிராக்கில் காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த இடத்தில் நடைபயிற்சி செய்வதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சாலையின் ஓரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலம் வரை காலியாக உள்ள இடத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்க முடிவு செய்தது. இதற்காக மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த உடற்பயிற்சி கூடத்தில் நின்று கொண்டே நடைபயிற்சி செய்வதற்கான உபகரணங்கள், தோள்பட்டை, மார்பு பகுதியை வலிமைப்படுத்துவதற்கான எளிய உடற்பயிற்சி உபகரணங்கள், இடுப்பை சுழற்றி உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் உள்பட 13 வகையான உடற்பயிற்சி கருவிகளை நிர்மாணிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் நடைபாதையின் நடுவில் மரக்கன்றுகள் நடப்பட இருக்கிறது. மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுவதற்காக ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, 50 அடி தூரத்திற்கு ஒரு தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டு தண்ணீர் பாய்ச்சவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. திருச்சி நகரில் ஏற்கனவே 3 இடங்களில் இதுபோன்ற திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story