இரவு நேரங்களில் குடிமகன்களின் பாராக மாறி வரும் இடைகாட்டூர் அரசு பள்ளி போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


இரவு நேரங்களில் குடிமகன்களின் பாராக மாறி வரும் இடைகாட்டூர் அரசு பள்ளி போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 April 2018 3:15 AM IST (Updated: 14 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

இரவு நேரங்களில் குடிமகன்களின் பாராக மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் அரசு பள்ளி மாறி வருகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இடைக்காட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள சிறுகுடி, பதினெட்டாம்கோட்டை, அருளானந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

வெளியூரில் இருந்து வரும் மாணவர்களின் வசதிக்காக பள்ளியின் அருகே அரசு விடுதியும் செயல்பட்டு வருகிறது. மேலும் சுற்றுப்புற கிராம மக்களின் குழந்தைகள் இப்பள்ளியை நம்பியே உள்ளனர். 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் போக மீதி உள்ள இடத்தை விளையாட்டு மைதானமாக மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பாதுகாப்பாக இருந்தது.

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த சுற்றுச்சுவரின் ஒருபகுதி சேதமடைந்தது சரி செய்யப்படாததால் மற்ற பகுதிகளிலும் சுற்றுச்சுவர் இடிந்து பாதுகாப்பில்லாமல் உள்ளது.

இதனால் இந்த பள்ளி வளாகம் இரவு நேரங்களில் குடிமகன்களின் பாராக மாறிவருகிறது. இரவு ஆனால் இவர்கள் இந்த பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அமர்ந்து அங்கு மது குடித்து அட்டகாசம் செய்கின்றனர். இன்னும் சில குடிமகன்கள் குடிபோதையில் காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து செல்கின்றனர்.

இதனால் காலையில் பள்ளிக்கு வரும் மாணவ–மாணவிகள் பள்ளி வளாகத்தில் உடைந்து கிடக்கும் பாட்டில்கள், காலி பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை அப்புறப்படுத்தும் பணியை செய்ய வேண்டியுள்ளது. இந்த பள்ளியில் இரவு நேரத்தில் காவலர் இல்லாததால் குடி மகன்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

மேலும் குடிமகன்கள் உடைத்து போடும் கண்ணாடி துகள்கள் பள்ளி மாணவ–மாணவிகளின் கால்களை பதம் பார்த்து வருகின்றன. எனவே இந்த பள்ளி அமைந்துள்ள பகுதியில் இரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள போலீசார் ரோந்து சென்று குடிமகன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் சேதமான இந்த தடுப்பு சுவர்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள், மாணவ–மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story