கொழும்பில் இருந்து மதுரை வந்த விமானத்தில் ரூ.3 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் கைது


கொழும்பில் இருந்து மதுரை வந்த விமானத்தில் ரூ.3 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் கைது
x
தினத்தந்தி 14 April 2018 3:45 AM IST (Updated: 14 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

கொழும்பில் இருந்து மதுரை வந்த விமானத்தில் ரூ.3 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை,

கொழும்பில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த முருகன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனர்.

இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், முருகன் உள்ளாடையில் மறைத்து வைத்து செவ்வக வடிவிலான 2 தங்க கட்டிகளை கடத்தி வந்துள்ளார். 100 கிராம் உள்ள அதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் இருக்கும். இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடைபெறாத வகையில் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Next Story