பவானியில் மணல் கடத்திய லாரி-மாட்டு வண்டி பறிமுதல்


பவானியில் மணல் கடத்திய லாரி-மாட்டு வண்டி பறிமுதல்
x
தினத்தந்தி 14 April 2018 3:45 AM IST (Updated: 14 April 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

பவானியில் மணல் கடத்திய லாரி, மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளை கிண்டல் செய்து அறிவிப்பு பலகை வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானி,

பவானியில் காவிரி ஆற்றிலும், பவானி ஆற்றிலும் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதேபோல் பவானி அருகே உள்ள ஜம்பை, சேர்வராயன்பாளையம், பெரியமோளபாளையம், சின்னமோளபாளையம், தளவாய்ப்பேட்டை, ஒரிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் மணல் கடத்தல் நடைபெறுகிறது. அதை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் கொள்ளை கும்பல் இரவு நேரத்தில் கைவரிசை காட்டிவிடுகிறார்கள். வெல்லம் காய்ச்சும் இரும்பு கொப்பரையில் மணலை அள்ளி கரைக்கு கொண்டு வருகிறார்கள். பின்னர் சாக்குகளில் சிறு சிறு மூட்டைகளாக கட்டி இருசக்கர வாகனங்களில் கொண்டுசென்று தேவைப்படுபவர்களுக்கு விற்றுவிடுகிறார்கள். இன்னும் சிலர் அதிகாலை நேரங்களில் லாரி, டிராக்டர், சரக்கு ஆட்டோ, வேன், மாட்டுவண்டிகளிலும் மணலை கடத்தி வருகிறார்கள். அதிகாரிகளும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சென்று மணல் அள்ள பயன்படுத்தும் இரும்பு கொப்பரை, மணல் கடத்த பயன்படும் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் பாதையில் பள்ளங்கள் வெட்டியும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பவானியில் நேற்று முன்தினம் இரவு ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. அதில், ‘ஜம்பையில் உள்ள பவானி ஆற்றில் குறைந்த அளவு மணலே உள்ளது. மணல் வேண்டுவோர் ஜம்பை கிராம நிர்வாக அலுவலர் அல்லது பவானி வட்டாச்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரை கவனித்து வர கேட்டுக்கொள்ளப்படுகிறது‘ இப்படிக்கு பவானி ஆற்றில் மணல் திருடி விற்போர் நலச்சங்கம், ஜம்பை( அரசு அனுமதி பெற்றது) பொதுமக்கள் நலன்கருதி வெளியிடுவோர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஜம்பை கிளை. என்று எழுதப்பட்டு இருந்தது. அதிகாரிகளுக்கு எதிராக கிண்டலாக வைக்கப்பட்டு இருந்த இந்த அறிவிப்பு பலகையால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அறிவிப்பு பலகையை யார் வைத்தது? என்று பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரபரப்புக்கு இடையே ஜம்பை அடுத்துள்ள தளவாய்ப்பேட்டையில் மினி லாரி மூலம் மணல் கடத்துவதாக நேற்று அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பவானி தாசில்தார் சிவகாமி, கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் 3 குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். அப்போது தளவாய்ப்பேட்டை பாலம் அருகே ஒரு லாரி மணலுடன் நின்றுகொண்டு இருந்தது. உள்ளே டிரைவர் இல்லை. அதிகாரிகள் வருவதை பார்த்து யாரோ மணல் கொள்ளையர்கள் லாரியை அப்படியே நிறுத்திவிட்டு சென்றது தெரிந்தது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மணலுடன் இருந்த லாரியை பறிமுதல் செய்து பவானி தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்கள். இதேபோல் ஒரிச்சேரி பகுதியில் ஒருவர் மாட்டு வண்டியில் நேற்று அதிகாலை மணல் கடத்தி வந்தார். அதிகாரிகளை கண்டதும் மாட்டு வண்டியை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டார். அந்த மாட்டு வண்டியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்கள். இந்த 2 மணல் கொள்ளைகள் குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story