டயர் வெடித்ததால் நிலைதடுமாறி ஓடிய கார் மோதி ஒருவர் சாவு


டயர் வெடித்ததால் நிலைதடுமாறி ஓடிய கார் மோதி ஒருவர் சாவு
x
தினத்தந்தி 14 April 2018 5:00 AM IST (Updated: 14 April 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

டென்மார்க் நாட்டில் வேலைபார்த்து வந்தவர் பெற்றோரை பார்க்க வந்த இடத்தில் மனைவியுடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது கார் மோதி பரிதாபமாக இறந்தார். 6 பேர் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை பே கோபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் குமரன் (வயது 35). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டென்மார்க் நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டிலேயே வசித்து வந்தார். 6 மாதத்திற்கு ஒருமுறை திருவண்ணாமலையில் உள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக இவர் வந்து செல்வார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குமரன் தனது மனைவியுடன் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். நேற்று அவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் சொந்தவேலையாக செங்கத்திற்கு சென்றனர். பின்னர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கொழாப்பாடி அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த காரின் டயர் திடீரென வெடித்தது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், குமரன் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குமரன் படுகாயம் அடைந்தார். அவரது மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த குமரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே மோட்டார்சைக்கிள் மீது மோதிய கார் தொடர்ந்து நிற்காமல் சாலையோரம் நின்று கொண்டு இருந்த 2 ஆட்டோக்கள் மீதும், சாலையில் நடந்து வந்த 6 பேர் மீதும் மோதியது. இதில் 6 பேரும் காயம் அடைந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த டிரைவர் விபத்து நடந்ததும் காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story