வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்வதில் இழுபறி ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம்
டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடந்த தேர்தல் குழு கூட்டத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
பெங்களூரு,
டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடந்த தேர்தல் குழு கூட்டத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. வேட்பாளர் பெயர்களை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் பரிசீலனை குழு
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஜனதா தளம்(எஸ்) மற்றும் பா.ஜனதா கட்சிகள் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் பரிசீலனை குழு கூட்டம் டெல்லியில் கடந்த 9-ந் தேதி தொடங்கி தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற்றது. அந்த குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தீவிர ஆலோசனை
இந்த நிலையில் வேட்பாளர்கள் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கும் அமைப்பான அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா, மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் 224 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. சில காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் வாரிசுகளுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறுகிறார்கள். இந்த விஷயத்தை பொறுத்தவரையில் இந்த முறை புதிதாக முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரி ராமலிங்கரெட்டி ஆகியோரின் வாரிசுகளுக்கு மட்டும் டிக்கெட் வழங்குவது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இழுபறி
இருந்தாலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இன்றும்(சனிக்கிழமை) காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் முடிவு எடுத்து, இன்று மாலைக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story