ஆறுகளில் கலக்கும் கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி


ஆறுகளில் கலக்கும் கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 14 April 2018 3:30 AM IST (Updated: 14 April 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பகுதிகளில் உள்ள ஆறுகளில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

காவிரி நீரைக்கொண்டு காவிரி டெல்டா பகுதியில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. சம்பா சாகுபடியும் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர நடைபெறவில்லை.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகள் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும்.

இதில் கல்லணைக்கால்வாய் எனப்படும் புது ஆறு தஞ்சை நகர் வழியாக செல்கிறது. இதே போல் வெண்ணாற்றில் இருந்து பிரிந்து செல்லும் வடவாறு தஞ்சை கரந்தை வழியாக செல்கிறது. கடந்த சில மாதங்களாக ஆறுகளில் தண்ணீர் வராததால் ஆறுகள் காய்ந்து கிடக்கின்றன. ஆனால் தஞ்சை நகர் பகுதிகளில் மட்டும் இந்த ஆறுகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகின்றன. அதுவும் வடவாற்றில் தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் ஆறுகளில் தேங்கி உள்ள சாக்கடை நீரால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த ஆற்றில் பாலிதீன் பைகள், குப்பைகள் போன்றவையும் தேங்கி கிடக்கின்றன.

இதேபோல் தஞ்சை நகரில் உள்ள கல்லணைக்கால்வாயிலும் சாக்கடை நீர் தேங்கி காணப்படுகின்றன. பல்வேறு இடங்களில் வீடுகளில் இருந்து சாக்கடை நீர், புது ஆற்றில் கலந்த வண்ணம் உள்ளன. இதனால் புது ஆற்றிலும் தண்ணீர் தேங்கி மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

இவ்வாறு சாக்கடை நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலையில் உள்ளது. தண்ணீர் வரும் காலகட்டத்தில் சாக்கடை நீரும் கலப்பதால் அதை உபயோகிப்பதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதையும் மீறி சாக்கடை கழிவுநீர் ஆறுகளில் கலந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “ஆறுகளில் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story