வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு


வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 14 April 2018 3:54 AM IST (Updated: 14 April 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள வெளி நோயாளிகள் பெயர் பதிவு செய்யும் அறை, மருந்தகம் மற்றும் மருந்துகள் பாதுகாப்பறை, ஆய்வகம், மருத்துவர்களின் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவமனையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், வெளிநோயாளிகள் சிகிச்சை பெற வரும்போது அவர்களது காலம் விரையமாகாமல், விரைவான சேவையை வழங்க வேண்டும் எனவும் மருத்துவ அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.

வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்டு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் பெயர் மற்றும் விவரங்கள் பதிவு செய்தல், மருத்துவ அனுமதி சீட்டு வழங்குதல், நோயாளிகளின் தொடர் சிகிச்சை விவரங்கள் போன்றவை சரிவர மேற்கொள்ளப்படுகின்றனவா? எனவும், மருந்து மாத்திரைகள் பற்றாக்குறையின்றி வழங்கப்படுகின்றனவா? எனவும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த விவரங்கள் பராமரிக்கும் பிரிவினை பார்வையிட்டு, நோயாளிகளின் தன்மையறிந்து அவர்களுக்காக விரைந்து சேவையாற்றுமாறு கூறினார்.

உள்நோயாளிகள் பிரிவு, காய்ச்சல் சிகிச்சை பிரிவு, பெண்கள் சிறப்பு சிகிச்சை பிரிவு, கர்ப்பிணி பெண்களுக்கான பிரசவ அறை, பச்சிளங் குழந்தைகள் நிலைப்படுத்தும் அறை, குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவு உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

முன்னதாக மகப்பேறு மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பிரசவித்த தாய்மார்களுக்கு “அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தினை“ வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆய்வின்போது, இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்)(பொ) மகேந்திரன், தலைமை மருத்துவர் அக்பர் அலி, தாசில்தார் சங்கர், டாக்டர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

Next Story