செல்போன் செயலி மூலம் முன்பதிவு இல்லாத ரெயில் டிக்கெட் மதுரை ரெயில்வே கோட்டத்தில் இன்று அறிமுகம்
செல்போன் செயலி மூலம் முன்பதிவு இல்லாத ரெயில் டிக்கெட்டுகளை எடுக்கும் வசதி இன்று (சனிக்கிழமை) முதல் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.
நெல்லை,
செல்போன் செயலி மூலம் முன்பதிவு இல்லாத ரெயில் டிக்கெட்டுகளை எடுக்கும் வசதி இன்று (சனிக்கிழமை) முதல் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.
புதிய டிக்கெட் எடுக்கும் வசதி
ரெயில்வே துறை “5 நிமிடங்களில் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள்” என்ற திட்டத்தை அறிவித்து இருந்தது. இந்த திட்டத்தின்படி ரெயில் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் மற்றும் நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை தங்களது செல்போன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதி இன்று (சனிக்கிழமை) முதல் தென்னக ரெயில்வே மதுரை கோட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மதுரை ரெயில்வே கோட்டத்தில், “ UTS ON-MOBILE ” என்ற செயலி (ஆப்) பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. GPS அடிப்படையிலான இந்த செயலியை ரெயில் பயணிகள், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான பண பரிவர்த்தனைக்கு ரெயில்வேயின் பிரத்யேக ‘gwallet’ல் ரெயில் பயண சீட்டு முன்பதிவு அலுவலகத்திலோ அல்லது www.irctc.co.in இணையதளம் மூலமாகவோ பணம் செலுத்தலாம்.
நடைமுறைகள்
இதுவரை காகித பயண சீட்டு இல்லாமல் ரெயில் பயணிகள் பயணம் செய்ய உதவும் வகையில் சென்னை புறநகர் ரெயில் சேவைகளில் மட்டுமே புழக்கத்தில் இருந்த இந்த செயலி தற்போது தென்னக ரெயில்வே முழுவதும் 20 லட்சம் முன்பதிவற்ற டிக்கெட்டுகள் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு (மொத்த ரெயில் பயணிகளில் இவர்களது எண்ணிக்கை 91 சதவீதம் ஆகும்) உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த செயலி மூலம் காகிதம் இல்லாத ரெயில் டிக்கெட்டுகளை ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து 25 மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் இருந்து பதிவு செய்து தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டை ஒரு செல்போனில் இருந்து மற்றொரு செல்போனுக்கு எந்த முறையிலும் மாற்ற முடியாது.
24 மணி நேரமும்...
டிக்கெட் இல்லாமல் ரெயிலில் அமர்ந்திருக்கும் பயணிகள், டிக்கெட் பரிசோதகரை பார்த்த பின்பு இந்த செயலி மூலம் டிக்கெட்டை பதிவு செய்து பெற முடியாது. ஏனென்றால் ரெயில் நிலைய வளாகம் மற்றும் ஓடும் ரெயில்களில் இந்த முறையில் டிக்கெட்டை பதிவு செய்ய முடியாது.
இதுகுறித்த மேலும் தகவல்களை பெறுவதற்கு முக்கிய ரெயில் நிலையங்களில் 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையங்களில் அல்லது utson-mobile.indianrail.gov.in என்ற இணையதளத்திலோ விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story