போரூர் ஏரியில் மூழ்கி இளம்பெண் பலி


போரூர் ஏரியில் மூழ்கி இளம்பெண் பலி
x
தினத்தந்தி 14 April 2018 4:19 AM IST (Updated: 14 April 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

போரூர் ஏரிக்குள் தவறி விழுந்த இளம்பெண், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த தெள்ளியார் அகரம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெசிந்தா (வயது 17). இவருடைய தந்தை இறந்துவிட்டார். தாயும் வேறு இடத்துக்கு சென்று விட்டார்.

பெற்றோர் இல்லாத காரணத்தால் ஜெசிந்தா, தனது அத்தை வீட்டில் வசித்து வந்தார். சில காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே 9-ம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்துக்கொண்ட ஜெசிந்தா, வீட்டில் இருந்து வந்தார்.

ஏரியில் மூழ்கி சாவு

இந்த நிலையில் நேற்று காலை ஜெசிந்தா, போரூரில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு தனது தோழியுடன் போரூர் ஏரிக்கு சென்றார். அப்போது ஏரியில் இறங்கி கால்களை கழுவிக்கொண்டு இருந்தபோது, திடீரென கால் தவறி ஏரிக்குள் விழுந்து நீரில் மூழ்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தோழி, கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஏரியில் மூழ்கிய ஜெசிந்தாவை பிணமாக மீட்டனர்.

நீரில் மூழ்கிய அவர், மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்துவிட்டார். அவரது உடலை மீட்ட போரூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story