மனுநீதி நாள் முகாம்: ரூ.59.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


மனுநீதி நாள் முகாம்: ரூ.59.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 14 April 2018 4:42 AM IST (Updated: 14 April 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் தாலுகாவில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 176 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா பெரியகுளம் மற்றும் பொம்மசமுத்திரம் ஆகிய வருவாய் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட கலெக்டரின் மனுநீதி நாள் முகாம் பெரியகுளம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, 176 பயனாளிகளுக்கு ரூ.59.20 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது.

மனுநீதி நாள் முகாமின் முக்கிய நோக்கமானது மக்களை தேடி அரசாங்கம் என்ற அடிப்படையில் தொலைதூர கிராம மக்களும் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதாகும். மாதந்தோறும் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், துணை கலெக்டர்கள் நிலையிலான மனுநீதி நாள் முகாம் கடைகோடி கிராமங்களில் நடத்தப்பட்டு, மக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதங்கள், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வருகின்ற மக்கள் குறைத்தீர்க்்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்படுகின்ற கோரி்க்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்தி்ட்ட உதவிகளும், உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

பொது சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள், இலவச சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சலை கண்டறிவதற்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு நவீன காய்ச்சல் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டு, இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடி இலவச சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன

வேளாண் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் ஈட்டுவதற்காக குறைந்த நீரை கொண்டு விவசாயம் மேற்கொள்ள அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்கி வருகின்றது.

பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி தங்களுக்கு தேவையான வருமான சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்று, விதவை சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் வருவாய் துறையின் சார்பில் இருக்கும் இடத்திலிருந்தே பெறும் வகையில் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

அதனைதொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை உரிய அலுவலரிடம் வழங்கி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த முகாமில் சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பேசினர். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இதில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) துரை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முரளிகிருஷ்ணன், மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பர்கத் பேகம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணியம், சேந்தமங்கலம் தாசில்தார் பிரகாசம், அட்மா கமிட்டி தலைவர் ஜி.பி.வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story