மழை எச்சரிக்கை: குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


மழை எச்சரிக்கை: குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 15 April 2018 4:30 AM IST (Updated: 15 April 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்ததால், குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கன்னியாகுமரி, மாலத்தீவு பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

குமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டது. அந்த அறிவிப்பில் லட்சத்தீவு, கன்னியாகுமரி, மாலத்தீவு கடல் பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்வதுடன், காற்று வேகமாக வீசக்கூடும்.

50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலில் மீன்பிடித்து கொண்டிருப்பவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும். குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குளச்சலில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வாகனங்களில் ரோந்து சென்று மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.

முட்டம், கடியப்பட்டணம், வாணியக்குடி, குறும்பனை, சைமன்காலனி, மண்டைக்காடு புதூர் போன்ற ஊர்களிலும் மீனவர்கள் எச்சரிக்கப்பட்டனர். இதனால் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால், குளச்சல் கடற்கரையில் ஆயிரக்கணக்கான கட்டுமரங்கள், வள்ளங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும், கடலுக்குள் சூறாவளி காற்று வீசியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதுபோல் சின்னமுட்டம், தேங்காப்பட்டணம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. ஏற்கனவே ஆழ்கடலுக்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இதனால், சந்தையில் மீன் வரத்து குறைந்து விலை உயர்ந்து காணப்படுகிறது.

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மதியத்துக்கு பிறகு பலத்த மழை பெய்தது. அன்று இரவிலும் பல இடங்களிர் மிதமான மழையாகவும், சாரல் மழையாகவும் பெய்தது. ஆனால் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்- 50.2, பேச்சிப்பாறை- 52.4, பெருஞ்சாணி- 32.2, சிற்றார் 1- 14, சிற்றார் 2- 15.2, மாம்பழத்துறையாறு- 8, புத்தன்அணை- 34.2, பூதப்பாண்டி- 38.4, களியல்- 18.2, கன்னிமார்- 22.6, குழித்துறை- 10, மயிலாடி- 9, சுருளகோடு- 28, தக்கலை- 21, குளச்சல்- 35.4, இரணியல்- 16, ஆரல்வாய்மொழி- 27, கோழிப்போர்விளை- 45.2, அடையாமடை- 34, முள்ளங்கினாவிளை- 15 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. 

Next Story