தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கூலித்தொழிலாளி திடீர் சாவு உறவினர்கள் முற்றுகை


தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கூலித்தொழிலாளி திடீர் சாவு உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 April 2018 4:30 AM IST (Updated: 15 April 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கூலித்தொழிலாளி திடீரென உயிரிழந்தார். இதனால் அந்த மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் அருகே வெள்ளியணை பக்கம் முத்தகா பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி(வயது 50). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 7-ந் தேதி திடீரென மயக்க மடைந்ததால் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மாரடைப்புக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை சுப்ரமணி திடீரென இறந்தார். அவரது உடலை ஆம்புலன்ஸ் வேனில் வைத்து மருத்துவ மனை நிர்வாகத்தினர் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டு உடல்தேறி வந்த நிலையில் திடீரென இறந்ததும், உடலை உறவினர்களுக்கு தெரியாமல் அனுப்பி வைக்க முயற்சித்தது குறித்தும் மருத்துவமனை தரப்பினர் விளக்க வேண்டும் என்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மருத்துவமனை தரப்பிலும் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசமடைந்த பின் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இறந்த சுப்ரமணியின் உடலை பெற்றுச்சென்றனர். 

Next Story