பாறை குட்டையில் மூழ்கி மாணவன் பலி மீட்கப்பட்ட மற்றொரு மாணவனுக்கு தீவிர சிகிச்சை


பாறை குட்டையில் மூழ்கி மாணவன் பலி மீட்கப்பட்ட மற்றொரு மாணவனுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 15 April 2018 4:30 AM IST (Updated: 15 April 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அருகே பாறை குட்டையில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலியானான். நீரில் மூழ்கிய மற்றொரு மாணவன் மீட்கப்பட்டான். அவனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி, கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நீலா. இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் பூவரசன் ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த கிணறு வெட்டும் தொழிலாளி பாட்டப்பன், மாரிசாமியின் உறவினர் ஆவார். இவருடைய மகன் பிரபாகரன் நீலாவின் தங்கை கோகிலாவின் வீட்டில் தங்கி ஆண்டிபாளையம் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை 11 மணியளவில் கோகிலா, ஆண்டிபாளையம் அருகே பொம்மக்கல் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பாறைக்குட்டைக்கு துணி துவைக்க சென்றார். அப்போது பூவரசன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் உடன் சென்றனர்.

கோகிலா துணி துவைத்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குட்டைக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும் தண்ணீருக்குள் தவறி விழுந்து மூழ்கி தத்தளித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோகிலா அக்கம் பக்கத்தினரை சத்தம் போட்டு அழைத்தார். உடனே அங்கு வந்த இளைஞர்கள் தண்ணீருக்குள் குதித்து சிறுவர்களை போராடி மீட்டனர். இதில் பூவரசன் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்தான்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவன் பிரபாகரனுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரபாகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story