ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் ரூ.72¾ கோடிக்கு விளைபொருட்கள் ஏலம்: கலெக்டர் பிரபாகர் தகவல்


ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் ரூ.72¾ கோடிக்கு விளைபொருட்கள் ஏலம்: கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 15 April 2018 5:30 AM IST (Updated: 15 April 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் ரூ.72¾ கோடிக்கு விளைபொருட்கள் ஏலம் போனதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு விற்பனைக்குழுவில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு பணப்பரிமாற்ற முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் இதுவரை நடத்தப்பட்ட ஏலத்தில் 5 ஆயிரத்து 168 விவசாயிகள் கொண்டு வந்த மஞ்சள் ஏலம் விடப்பட்டு உள்ளது. இதற்கான தொகை ரூ.57 கோடியே 78 ஆயிரத்து 112 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி முதல் 5 ஆயிரத்து 237 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி விற்பனை செய்யப்பட்டு ரூ.6 கோடியே 82 லட்சத்து 32 ஆயிரத்து 919 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி முதல் 2 ஆயிரத்து 3 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி ஏலம் விடப்பட்டு 3 கோடியே 15 லட்சத்து 68 ஆயிரத்து 240 ரூபாயும், கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி முதல் 25 விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டு 5 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயும், சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி முதல் 73 விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை தேங்காய் விற்பனை செய்யப்பட்டு 9 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி 588 விவசாயிகள் கொண்டு வந்த எள், கொப்பரை தேங்காய் விற்பனை செய்யப்பட்டு 2 கோடியே 7 லட்சத்து 48 ஆயிரத்து 84 ரூபாயும், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி முதல் 1,461 விவசாயிகள் கொண்டு வந்த எள் ரூ.3 கோடியே 23 லட்சத்து 96 ஆயிரத்து 198 ரூபாயும், கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த 10-ந் தேதி முதல் 235 விவசாயிகள் கொண்டு வந்த எள் விற்பனை செய்யப்பட்டு 31 லட்சத்து 18 ஆயிரத்து 45 ரூபாயும் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.

எனவே ஈரோடு மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு பணப்பரிமாற்ற முறை தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் ரூ.72 கோடியே 76 லட்சத்து 1,598-க்கு விளை பொருட்கள் ஏலம் விடப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

Next Story