அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற வேண்டி பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட யாத்திரை


அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற வேண்டி பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட யாத்திரை
x
தினத்தந்தி 15 April 2018 3:45 AM IST (Updated: 15 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற வேண்டி பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட யாத்திரை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

அவினாசி,

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 1,500 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. எனவே வறட்சியில் இருந்து மீள்வதற்காக பவானி ஆற்றில் மழை காலங்களில் வெளியேறும் உபரிநீரை கொண்டு நிலத்தடி நீரை செறிவூட்ட திட்டமிடப்பட்டது.

அதன்படி, பவானி ஆற்றில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்றவற்றுக்கு தண்ணீர் கொண்டுவந்து, நிலத்தடி நீரை செறிவூட்டுவதே அத்திக்கடவு-அவினாசி திட்டமாகும். இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி இந்த பகுதி பொதுமக்கள் கடந்த 60 ஆண்டுகளாக தொடர் உண்ணாவிரதம், நடைபயணம், வாகன பேரணி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், தர்ணா என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நீண்ட இழுபறிக்கு பின்பு அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு ரூ.1,652 கோடி நிதி ஒதுக்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ் பகுதியில் இருந்து, குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து 32 குளங்கள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 970 ஊராட்சி குளங்களுக்கு நீர் நிரப்பும் திட்டமாக செயல்படுத்த அரசு நிர்வாக அனுமதியும் வழங்கி உள்ளது.

இந்தநிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை துரிதமாக நிறைவேற்ற வேண்டி கடந்த 3 ஆண்டுகளாக தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் முதல் நாள் அத்திக்கடவு-அவினாசி திட்ட போராட்ட குழுவினரும், பொதுமக்களும், விவசாயிகளும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட யாத்திரை நடத்தி வருகிறார்கள். அதன்படி, நேற்று 4-வது ஆண்டாக தீர்த்தக்குட யாத்திரை நடந்தது.

இதையொட்டி கோபி, கவுந்தம்பாடி, சக்தி, கெட்டி செவியூர், நம்பியூர், கொளப்பலூர், திங்களூர், செங்கப்பள்ளி, குன்னத்தூர், பெருமாநல்லூர், அவினாசி, கருவலூர், நம்பியாம்பாளையம், அன்னூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்தும் திரளான விவசாயிகள், சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் நேற்று காலை ஒன்று கூடினார்கள். அங்கு திரளானவர்கள் தாங்கள் கொண்டுவந்த குடங்களில் தீர்த்தம் எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

பின்னர் அந்த தீர்த்தக்குடங்களை யாத்திரையாக எடுத்து சென்று அந்தந்த கிராமங்களில் உள்ள கோவில்களில் வைத்து சிறப்பு பூஜை செய்து, மூலவருக்கு பவானி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர். அப்போது, அவர்கள் அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற வேண்டிக்கொண்டனர்.

Next Story