காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீக்குளித்து இறந்த வைகோவின் உறவினரது உடல் தகனம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீக்குளித்து இறந்த வைகோவின் உறவினரது உடல் தகனம்
x
தினத்தந்தி 15 April 2018 4:30 AM IST (Updated: 15 April 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தீக்குளித்து இறந்த வைகோவின் உறவினரின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

கோவில்பட்டி,

விருதுநகர் ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்தவர் சரவண சுரேஷ் (வயது 50). இவர் அட்டை வியாபாரம் செய்து வந்தார். இவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனர் ராமானுஜத்தின் மகன் ஆவார். நேற்று முன்தினம் இவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளித்தார். மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சரவண சுரேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குலசேகரபுரம் என்ற பெருமாள்பட்டிக்கு நேற்று மாலையில் வேனில் கொண்டு வரப்பட்டது. அந்த வேனில் வைகோவும் உடன் வந்தார்.

சரவண சுரேஷின் வீட்டின் முன்பு அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முன்னாள் எம்.பி.க்கள் தங்கவேல், ஈரோடு கணேசமூர்த்தி, சிப்பிபாறை ரவிச்சந்திரன், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அய்யலுசாமி, ராஜேந்திரன் மற்றும் ம.தி.மு.க.வினர் உள்பட ஏராளமானவர்கள் சரவண சுரேஷின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சரவண சுரேஷின் உடல் மீது ம.தி.மு.க. கொடி போர்த்தப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் சரவண சுரேஷின் உடலை ஊர்வலமாக அங்குள்ள மயானத்துக்கு எடுத்து சென்றனர். சரவண சுரேஷின் உடலுக்கு அவருடைய மகன் ஜெயசூர்யா எரியூட்டினார். பின்னர் சரவண சுரேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளித்த விருதுநகரைச் சேர்ந்தவரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மருமகனுமான சரவண சுரேஷ், இறந்துள்ள செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வைகோவுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறும் அதேநேரத்தில், சரவண சுரேஷ் மறைவு என்னை மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டது.

தமிழக நலனுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்துள்ள இந்தநிகழ்வு, காவிரிப்பிரச்சினை தமிழினத்தின் உயிரோடு கலந்திருப்பதை மீண்டும் அனைவருக்கும் உணர்த்துகிறது. ஆனாலும், இதுபோன்ற தியாகங்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என்று நானும், வைகோவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் மாநில நலன் காக்கவும், மண்ணின் உரிமைகளை நிலைநாட்டவும் நடைபெறும் அறவழிப் போராட்டங்களுக்கு எப்போதும் தேவை என்பதால், ஜனநாயகரீதியிலான போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்றும், இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்களில் நிச்சயமாக ஈடுபட வேண்டாம் என்றும் மீண்டும் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இரங்கல் செய்தியில் அவர் கூறியுள்ளார். 

Next Story