எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சித்தராமையா தோல்வி அடைவது உறுதி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
சாமுண்டீஸ்வரி, பாதாமி மட்டும் அல்ல எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சித்தராமையா தோல்வி அடைவது உறுதி என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
சாமுண்டீஸ்வரி, பாதாமி மட்டும் அல்ல எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சித்தராமையா தோல்வி அடைவது உறுதி என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
2 தொகுதிகளில் போட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலில் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி ஆகிய 2 தொகுதிகளிலும் முதல்-மந்திரி சித்தராமையா போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து உப்பள்ளியில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
சித்தராமையா தோல்வி உறுதி
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தனது 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளார். இந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் எந்த விதமான ஊழலும் நடைபெறவில்லை என்று சித்தராமையா கூறி வருகிறார். அவரது ஆட்சியில் நடந்த ஊழல்கள் ஒவ்வொன்றாக பா.ஜனதா கட்சி அம்பலப்படுத்தி வருகிறது. அதுபற்றி சித்தராமையாவால் பதில் சொல்ல முடியவில்லை. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். முதலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டி யிடுவேன் என்று ஆவேசமாக கூறினார்.
அங்கு நடந்த கருத்து கணிப்பில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில், பாதாமி தொகுதியிலும் போட்டியிட தீர்மானித்திருக்கிறார். 5 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடத்தி இருந்தால், மாநிலத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் ஒரு மாநில முதல்-மந்திரியாக இருந்தவர் என்பதால் வெற்றி பெறலாம். 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியால் மக்கள் சித்தராமையா மீது கோபத்தில் உள்ளனர். அதனால் சாமுண்டீஸ்வரி, பாதாமி மட்டும் அல்ல, எந்த தொகுதியில் சித்தராமையா போட்டியிட்டாலும் தோல்வி அடைவது உறுதி. தேர்தலுக்கு முன்பாகவே சித்தராமையாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. பா.ஜனதாவை ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
Related Tags :
Next Story