திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ‘சுவராஜ் அபியான்’ நிகழ்ச்சி: வேலைவாய்ப்பு துறை முதன்மை செயலர் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ‘சுவராஜ் அபியான்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று வேலைவாய்ப்பு துறை முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்தார்.
திண்டுக்கல்,
அம்பேத்கர் பிறந்தநாள் விழா
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, சமூக நீதி நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அரசு முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் வேலு, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது அரசு முதன்மை செயலர் பேசியதாவது:-
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று (நேற்று) முதல் அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி வரை ‘சுவராஜ் அபியான்’ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல், நலத்திட்டங்கள், கிராமப்புற தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் துப்புரவு பணிகள், நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்தல், திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கமற்ற ஊராட்சிகளாக மாற்றுதல், தகுதி வாய்ந்த பயனானிகளுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்குதல், மின்வாரியம் மூலம் எல்.இ.டி. விளக்குகள் விற்பனை செய்தல், வீடுகள் கட்டி தருதல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்படும். மேலும், மருத்துவ காப்பீடு, சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு வங்கி கணக்கு தொடங்குதல் போன்ற திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக அந்த திட்டங்களை உள்ளடக்கி வருகிற 24-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மடிக்கணினி
இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் 10 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியையும் முதன்மை செயலர் வழங்கினார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு உதவி தொகையாக ரூ.7 லட்சத்து 45 ஆயிரமும், வருவாய்த்துறையின் சார்பில் 15 பேருக்கு சாதி சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஆர்.டி.ஓ. ஜான்சன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கருப்பையா, முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மல்லிகா, சமூகநலத்துறை அலுவலர் சாந்தி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story