உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 15 April 2018 4:28 PM IST (Updated: 15 April 2018 4:28 PM IST)
t-max-icont-min-icon

அந்த மருத்துவமனையில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் துப்புரவு பணியாளராக வேலைபார்க்கிறார்.

 16 வயது மதிக்கத்தக்க ஒல்லியான உடல்வாகு கொண்ட சிறுமியும், அவளது கையில் 7 மாத கைக்குழந்தை ஒன்றும் அவரோடு இருந்து கொண்டிருக்கிறது.

துப்புரவு பணி செய்யும் பெண், அந்த சிறுமியின் தாயார். அந்த கைக்குழந்தைக்கு, சிறுமிதான் தாயார்.

அவள் எப்படி தாயானாள்? எப்படி வஞ்சிக்கப்பட்டாள்? என்பது பற்றி கண்ணீரோடு இப்படி சொல்கிறாள்:

‘நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். குடிப் பழக்கத்திற்கு அடிமையான என் தந்தை, பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். தாயார்தான் வீட்டு வேலை செய்து என்னை படிக்கவைத்தார். எனக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. தடகள விளையாட்டில் நான் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றிருந்தேன். பள்ளியில் உள்ள ஒருவர் என்னை ரொம்பவும் உற்சாகப்படுத்தினார். அவர் எனக்கு அதிக பயிற்சிகள் கொடுத்து, மாநில அளவிலான போட்டிகளுக்கு தயார்படுத்தினார். போட்டிகளுக்காக அவ்வப்போது வெளியூர் களுக்கு அழைத்துச் சென்றார். நானும் அவரை நம்பி எல்லா இடங்களுக்கும் சென்றேன்.

அன்று பிரபலமான பயிற்சியாளரிடம் அழைத்துச் செல்வதாகக்கூறி, என்னை வெளியூருக்கு அழைத்தார். நானும் சென்றேன். அந்த பயிற்சியாளர் மறுநாள்தான் வருவார் என்று கூறினார். அதனால் நான் அன்றிரவு அங்கே தங்கவேண்டியதாயிற்று. அங்கு உறவினரின் வீடு என்று கூறி, குடியிருப்பு ஒன்றில் என்னை தங்கவைத்தார். அந்த வீட்டில் ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தாள். இரவில் சாப்பிட்டுவிட்டு நான் தூங்கச் சென்றேன்.

சாப்பாட்டில் எனக்கு எதையோ கலந்து தந்திருக்கிறார்கள். நான் இரவில் நினைவிழந்திருக்கிறேன். அப்போது நாலைந்து பேர் என்னை மானபங்கம் செய்திருக்கிறார்கள். என்னை அழைத்துச் சென்றவன், அதனை அவனது செல்போனில் பதிவு செய்திருக்கிறான்.

காலையில் நினைவுவந்தபோது நான் கடுமையான உடல்வலியாலும், காய்ச்சலாலும் அவதிப்பட்டேன். என்னை அங்குள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து சென்று, நான் இரவில் எதையோ பார்த்து பயந்திருப்பதாகவும், அதனால் காய்ச்சல் வந்திருப்பதாகவும் கூறி மாத்திரைகள் வாங்கித் தந்தார்கள்.

எனக்கு நடந்த அவலத்தை என்னால் யூகிக்க முடிந்தது. நான் அழுதுகொண்டே இருந்தேன். அவன் என்னை திட்டமிட்டு வஞ்சித்திருப்பது எனக்கு புரிந்தது. நான் அவனிடம் சண்டையிட்டுக்கொண்டு தனியாக பஸ் ஏறி எங்கள் வீட்டிற்கு சென்றேன்.

நடந்ததை என் தாயாரிடம் சொன்னதும் அவர், அந்த சதிகாரனிடம் என்னை அழைத்துச்சென்று நியாயம் கேட்டார். பள்ளியில் போய் புகார் செய்யப்போவதாக சொன்னார். உடனே அவன், பதிவு செய்யப்பட்டிருந்த காட்சிகளைகாட்டி, ‘உங்கள் மகள் ஒன்றும் ஒழுக்கமானவள் இல்லை. அவள் பல்வேறு நாட்கள் பல்வேறு நபர்களோடு தொடர்புவைத்திருக்கிறாள். அதற்கான ஆதாரம் இதில் உள்ளது. நீங்கள் என்னை அசிங்கப்படுத்த நினைத்தால், நான் இதை வெளியிட்டு உங்கள் மகள் ஒழுக்கங்கெட்டவள் என்று சொல்வேன்’ என்றான்.

அதை கேட்டு என் அம்மா மனதொடிந்து போனார். தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். இத்தகைய நெருக்கடிகளால் ஏற்பட்ட மனப் போராட்டத்தால் நான் கர்ப்பிணியாகியிருப்பதை என்னால் உணர முடியவில்லை. அதற்குள் நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.

அவமானத்தால் நாங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியேறினோம். இந்த மருத்துவ மனைக்கு அம்மா என்னை அழைத்து வந்து, கருவை கலைக்கும்படி டாக்டரின் கால்களை பிடித்து கெஞ்சினார்.

மாதங்கள் பல கடந்துவிட்டதால் கருவை கலைத்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்த்திய டாக்டர், கருவை கலைக்கா விட்டாலும் எங்கள் மீது பரிதாபப்பட்டு என் அம்மாவுக்கு தனது மருத்துவமனையிலே வேலை தந்தார். பிரசவம் நடக்கும் வரை நாங்கள் தங்கியிருக்கவும் ஒரு வீடு ஏற்பாடு செய்து தந்தார். எனக்கு ரகசியமாக இன்னொரு மருத்துவ மனையில் பிரசவம் நடந்தது. பின்பு எனக்கும் அந்த டாக்டர் தனது மருத்துவமனையிலே வேலை தந்திருக்கிறார்..’ என்றாள்.

தனது எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலை அவளுக்கு இருந்துகொண்டிருக்கிறது. யாராவது அவள் கையில் இருக்கும் குழந்தையை பற்றி கேட்டால், ‘எனது அக்காளும், அவளது கணவரும் விபத்தில் இறந்துவிட்டார்கள். அவர்களது குழந்தையை நானும், அம்மாவும் சேர்ந்து வளர்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று கூறி சமாளித்துக்கொண்டிருக் கிறாள்.

- உஷாரு வரும்.

Next Story