சட்ட விரோதமாக மதுவிற்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் போராட்டம்


சட்ட விரோதமாக மதுவிற்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் போராட்டம்
x
தினத்தந்தி 16 April 2018 4:30 AM IST (Updated: 15 April 2018 10:28 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் சட்ட விரோதமாக மதுவிற்றதாக கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஒழுகினசேரி ஆற்று பாலம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையையொட்டி பார் ஒன்றும் நடத்தப்படுகிறது. இந்த பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சட்டவிரோதமாக ஸ்கூட்டரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கூறி, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன்(வயது 52) மற்றும் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த கோபால்(42), நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்த இளங்கோவன், ஈசாந்திமங்கலத்தை சேர்ந்த பிரபு(34) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.


ஆனால், தான் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யவில்லை என்றும், பொய்யாக போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும் எனவே, தனக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றவேண்டும் என்று கோரியும் நாஞ்சில் முருகேசன் மற்றும் அவருடன் கைதானவர்களும் நேற்று காலை 11 மணி அளவில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை முன் திடீரென திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக நேற்று மதியம் 12 மணிக்கு திறக்கப்படவேண்டிய டாஸ்மாக் கடையை, அதன் பணியாளர்கள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்த வடசேரி போலீசாரும், அந்த டாஸ்மாக் கடை பணியாளர்களும், போராட்டம் நடத்திய நாஞ்சில் முருகேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தைக்கு அவர் உடன்படவில்லை. இதையடுத்து கடை பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அப்போது, அதிகாரிகள் அந்த டாஸ்மாக் கடையை ஒருவார காலத்தில் காலிசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்கள். அந்த தகவலை பணியாளர்கள், நாஞ்சில் முருகேசனிடம் தெரிவித்தனர். இதையடுத்து, நாஞ்சில் முருகேசன் போராட்டத்தை கைவிட்டார்.


இதுதொடர்பாக, நாஞ்சில் முருகேசன் நிருபர்களிடம் கூறும்போது, “போலீசார் என் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். இதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. இதுபோன்று பலமுறை என்னை போலீசார் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் என்னால் நிம்மதியாக வாழமுடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் நான் தற்கொலைசெய்வது தவிர வேறு வழியில்லை. இதுபோன்ற அவமானங்களை என்னால் தாங்கிகொள்ள முடியாது. எனவே, எனது இடத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை அரசு காலிசெய்யவேண்டும். போலீசார், என்மீது பொய்வழக்கு பதிவுசெய்து கைது செய்ததை சட்டப்படி எதிர்கொள்வேன்“ என்றார்.

சுமார் 1½ மணிநேரம் நடந்த இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு 12.40 மணிக்கு அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

Next Story