கூடலூரில் கடும் வெயிலால் கருகும் தேயிலை செடிகள்: விளைச்சல் பாதிப்பு, விவசாயிகள் கவலை


கூடலூரில் கடும் வெயிலால் கருகும் தேயிலை செடிகள்: விளைச்சல் பாதிப்பு, விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 16 April 2018 3:45 AM IST (Updated: 16 April 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் கடும் வெயிலால் தேயிலை செடிகள் கருகி வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது. இதனால் பொதுமக்களின் வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு சொந்தமான பொது குடிநீர் கிணறுகளில் தண்ணீர் வற்ற தொடங்கி உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு பல இடங்களில் தலைதூக்கி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பச்சை தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்காத நிலையில் தற்போது அதிகரித்து வரும் கோடை வெயில் காரணமாக தேயிலை விளைச்சலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

தோட்டங்களில் ஈரத்தன்மை இல்லாமல் வறண்டு விட்டதால் பச்சை தேயிலை விளைச்சல் குறைந்து வருகிறது. வழக்கமாக மழைக்காலங்களில் தொழிற்சாலைகளுக்கு தினமும் 40 ஆயிரம் கிலோ பச்சை தேயிலை வரத்து இருக்கும். ஆனால் கோடை வெயில் தாக்கம் அதிகமாகி விட்டதால் தொழிற்சாலைகளுக்கு பாதி அளவு பச்சை தேயிலை மட்டுமே வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் சில தினங்கள் பரவலாக சாரல் மழை பெய்தது. வாடி வதங்கிய தேயிலை செடிகளுக்கு சற்று நிவாரணம் அளிக்கும் வகையில் மழை இருந்தது. இதன் காரணமாக சில வாரங்கள் தேயிலை செடிகள் பசுமையாக காட்சி அளித்தது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை மழை அடிக்கடி பெய்யும் தேயிலை செடிகளை பாதுகாத்து விடலாம் என விவசாயிகள் எண்ணினர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை கலைக்கும் வகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தேயிலை செடிகள் கருகி வருகிறது. இதில் சிறு விவசாயிகள் மட்டுமின்றி சிறு குறு மற்றும் பெரிய தோட்ட நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.

தேயிலை செடிகள் கருகி வருவதால் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேயிலை தோட்ட உரிமையாளர்களும் கவலை அடைந்து உள்ளனர். மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட போதிய வருவாய் கிடைக்காததால் சிறு குறு மற்றும் பெரிய தேயிலை தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளித்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.15 மட்டுமே விலை கிடைக்கிறது. இது கட்டுப்படி ஆவது இல்லை. கடந்த மாதம் சில நாட்கள் சாரல் மழை பெய்தது. இதனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட தேயிலை செடிகளில் கொழுந்து வரத்து அதிகரித்தது. தற்போது வெயில் அதிகமாக உள்ளதால் தேயிலை செடிகள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. பெயரளவுக்கு பெய்த சாரல் மழை மற்றும் கடும் வெயில் காரணமாக தேயிலை செடிகளை நோய் தாக்கி வருகிறது. இதைவிட்டு வேறு விவசாயத்துக்கும் மாற முடியாத நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கவலை யுடன் கூறினர். 

Next Story