ரெயில் மோதி ‘கேட் கீப்பர்’ பலி தண்டவாளத்தில் இருந்த சிவப்பு கொடியை அகற்றியபோது பரிதாபம்


ரெயில் மோதி ‘கேட் கீப்பர்’ பலி தண்டவாளத்தில் இருந்த சிவப்பு கொடியை அகற்றியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 15 April 2018 11:00 PM GMT (Updated: 15 April 2018 6:48 PM GMT)

மணப்பாறை அருகே தண்டவாளத்தில் இருந்த சிவப்பு கொடியை அகற்றியபோது ரெயில் மோதியதில் ‘கேட் கீப்பர்‘ உயிரிழந்தார்.

மணப்பாறை,

புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிப்பட்டி அருகே உள்ள எல்லைக்கால் பட்டியை சேர்ந்தவர் மாமுண்டி. ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 23). இவர் ரெயில்வேயில் கேட் கீப்பராக பணியாற்றி வந்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டியில் உள்ள ரெயில்வே கேட்டில் நேற்று காலை மோகன்ராஜ் பணியில் இருந்தார்.

அப்போது அந்த வழியாக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதாக அழைப்பு வந்தது. இதற்காக, ரெயில்வே கேட்டை மோகன்ராஜ் பூட்டினார். ஆனால், தண்டவாளத்தில் ஊன்றி வைக்கப்பட்டிருந்த சிவப்பு கொடியை எடுக்க மறந்து விட்டார். அப்போது ரெயில் அருகில் வந்து கொண்டிருந்தது. சிவப்பு கொடி தண்டவாளத்தில் இருப்பதை கவனித்து அதை எடுக்க முயன்றார். ஆனால், அதற்குள் அவர் மீது ரெயில் மோதியது. இதில் மோகன்ராஜ் தூக்கி வீசப்பட்டு தண்டவாளத்தில் கிடந்தார்.

இதை பார்த்ததும் ரெயில்வே கேட்டின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஓடிச் சென்று அவரை தூக்கி பார்த்த போது அவர் இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கு நிறுத்தப்பட்டது. பின்னர் சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரூபினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், இதுகுறித்து மணப்பாறை ரெயில்வே அதிகாரிகள், திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த மோகன்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, மோகன்ராஜ் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கண்ணுடையான்பட்டி கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் இறந்த மோகன்ராஜின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

ரெயில்வே கேட் கீப்பர் ரெயில் மோதி இறந்ததை அடுத்து உடனடியாக ஏற்கனவே பணியில் இருந்த மற்றொரு கேட் கீப்பர் வந்து பணியை தொடர்ந்தார். 

Next Story